கரூர்:கரூர் மாநகராட்சிக்குட்பட்ட வெங்கமேடு பகுதியில் வசித்து வருபவர், பெரியசாமி (70). சிறுநீரகங்கள் செயலிழந்ததன் காரணமாக, இவர் டயாலிசிஸ் எனும் ரத்த சுத்திகரிப்பு சிகிச்சை செய்து வருகிறார். வாரத்தில் இரண்டு முறை டயாலிசிஸ் செய்ய வாரம் ஒன்றுக்கு ரூ.12,000 மருத்துவ சிகிச்சைக்காக மட்டும் செலவு செய்து வருவதாக கூறப்படுகிறது.
1969ஆம் ஆண்டு குடும்பத்துடன் அந்தமான் தீவுக்கு சென்ற பெரியசாமி தற்பொழுது தமிழகம் திரும்பி, அவரது சொந்த ஊரான, கரூர் அருகே உள்ள செய்யப்பகவுண்டன்புதூரில் வசித்து வருகிறார். இங்குள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் இவர் தமிழகத்தில் காப்பீட்டு அட்டை பெற ரேஷன் கார்டு வழங்கக் கோரி விண்ணப்பித்துள்ளார்.
ஆனால், பல மாதங்கள் ஆகியும் இதுவரை ரேஷன் கார்டு வழங்குவதற்கு வட்ட வழங்கல் துறை நடவடிக்கை மேற்கொள்ளாததால், தினந்தோறும் உயிருக்குப் போராடி வருவதாக வேதனை தெரிவித்துள்ளார். தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கரூர் மாவட்ட ஆட்சியர், மண்மங்கலம் வட்டாட்சியர் உள்ளிட்டோருக்கு ஏராளமான மனுக்கள் அளித்தும், இதுவரை எவ்வித பயனும் இல்லை என அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
தமிழகத்தில் தனக்கு, ஓட்டுரிமை, ஆதார் உள்ளிட்ட அனைத்து ஆவணங்கள் இருந்தும் ரேஷன் அட்டை இல்லாததால், அரசின் உதவியுடன் மருத்துவ சிகிச்சை பெற முடியாமல் தவித்து வருவதாகவும் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இது குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்து வருகிறார்.