கரூர்: கரூர் மாவட்டம், குப்பிச்சிபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் பிரகாஷ். இவரது மகள் சோபனாவிற்கு வழங்கிய 22 ஏக்கர் நிலம் தொடர்பான தானபத்திரம் தொலைந்து விட்டது என்று கூறி மேலக்கரூர் பத்திரப்பதிவு அலுவலகத்தில், கடந்த ஏப் 6ஆம் தேதி அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.பாஸ்கருக்கு நெருக்கமானவர்கள் எனக் கூறப்படும் வழக்கறிஞர் சங்கத் தலைவர் மாரியப்பன், செல்வராஜ், சித்தார்த்தன், ரகு என்ற நான்கு பேர் பத்திரப்பதிவு செய்துள்ளனர்.
இது தொடர்பாக மேலக்கரூர் சார்பதிவாளர் (பொறுப்பு) முகமது அப்துல் காதர் என்பவரிடம் பிரகாஷ் அளித்த புகாரின் அடிப்படையில், சார்பதிவாளர் கரூர் நகர காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்தப் புகாரின் அடிப்படையின் கடந்த ஜூன் 9ஆம் தேதி கரூர் நகர போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் கரூர் நீதிமன்றத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் முன்ஜாமீன் கோரி மனுத்தாக்கல் செய்தார்.
இந்த மனுவினை ஏற்றுக் கொண்ட நீதிபதி கடந்த ஜூன் 12ஆம் தேதி விசாரணை நடத்திய போது காவல்துறை சார்பில் அதிமுக முன்னாள் அமைச்சர் மீது வழக்குப்பதிவு செய்யாத நிலையில், முன்ஜாமீன் கோரி மனுத்தாக்கல் செய்திருப்பது குறித்து கால அவகாசம் கோரப்பட்டது. பின்னர், ஜூன் 15ஆம் தேதி அரசு தரப்பு பதிலை தாக்கல் செய்ய உத்தரவிட்டு, கரூர் முதன்மை மாவட்ட அமர்வு நீதிபதி ஆர்.சண்முகசுந்தரம் ஜாமீன் மனு விசாரணையை தள்ளி வைத்தார்.