கரூர்:கிறிஸ்தவ மக்கள் இயக்கத்தின் தலைவரும், வழக்கறிஞருமான அகஸ்டின், இன்று கரூர் கடை வீதியில் உள்ள தலைமை தபால் அலுவலகத்தில், பிரதமர் நரேந்திர மோடிக்கு கோரிக்கை மனு ஒன்றை பதிவு தபால் வழியாக அனுப்பி வைத்தார்.
அந்த மனுவில் அவர் குறிப்பிடுவதாவது, “கரூர் மாவட்டத்தில் மக்களின் நல்ல மதிப்பை பெற்றவர் எம்.ஆர்.விஜயபாஸ்கர். இவர் அதிமுக கரூர் மாவட்டச் செயலாளராகவும், முன்னாள் தமிழக போக்குவரத்து துறை அமைச்சராகவும் பதவி வகித்தவர். இவர் மீது உரிமையியல் வழக்கு ஒன்றில் கைது செய்யப்பட்டு கிரிமினல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்த வழக்கினை ரத்து செய்து, எம்.ஆர்.விஜயபாஸ்கரை விடுதலை செய்ய வேண்டும் என பிரதமர் மோடிக்கு கோரிக்கை வைக்கிறோம்” என எழுதப்பட்டிருந்தது.
பின் இதுகுறித்து பேசிய வழக்கறிஞர் அகஸ்டின், “கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த அதிமுக மாவட்டச் செயலாளர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கரூர் மாவட்டத்திற்கு எண்ணற்ற திட்டங்களை தனது முயற்சியால் கொண்டு வந்தவர். அவற்றுள் கரூர் மாவட்டத்தில் இயங்கும் அரசு மருத்துவக் கல்லூரி உட்பட கரூர் மாவட்டம் முழுவதும் இயற்கை சுற்றுச்சூழல் காக்கும் வகையில் ‘கானகத்தில் கரூர்’ என்ற பெயரில் ஆயிரக்கணக்கான மரங்களை நட்டு வளர்த்து வருகிறார்.
மேலும், அவர் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தபோது, தீபாவளி தினத்தன்றும் தன் குடும்பத்துடன் தீபாவளி கொண்டாடாமல், சென்னையில் இருந்து வெளியூர் செல்லும் மக்களுக்குத் தேவையான போக்குவரத்து வசதிகளை செய்து கொடுத்தவர்.