சென்னை: பாஜக மாநில துணைத் தலைவர் கரு.நாகராஜன் தியாகராய நகரில் உள்ள பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் செய்தியாளர்களை நேற்று (புதன்கிழமை) சந்தித்துப் பேசினார். அப்போது பேசிய அவர்,'நாடாளுன்றத்தில் ராகுல் காந்தி அக்னிபாத் தொடர்பாக பெரிய பொய்யை கூறியுள்ளார். அதற்கு ராஜ்நாத் சிங் பதிலடியும் கொடுத்துள்ளார். ராகுல் காந்தி மட்டும் அல்ல, நமது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், உதயநிதி என அனைவருக்கும் இந்த திட்டத்தை குறை சொல்வதுதான் நோக்கம்.
ராணுவத்தை பகடையாகப் பயன்படுத்தி, அதன் வளர்ச்சிக்கு இடையூறாக நின்றது காங்கிரஸ் கட்சி. 1985ஆம் ஆண்டிற்கு பிறகு இந்தியாவில் ஒரு நவீன போர் விமானம் கூட வாங்கவில்லை. இன்று ரஃபேல் வாங்கப்பட்டுள்ளது. இந்தியாவின் விமானப்படை, கடற்படை உலகின் 3வது இடத்தில் உள்ளது. மேலும், இன்று நாட்டு எல்லையில் 1,140 பாலங்கள் புதிதாக கட்டியுள்ளோம். மூன்று கமிட்டி அமைக்கப்பட்டு ஆலோசனைக்கு பிறகு 'அக்னிபாத் திட்டம்' (Agnipath Scheme) உருவாக்கப்பட்டது.
ஆனால், காங்கிரஸ் கட்சி வலிமை இல்லாத ராணுவமாக நமது ராணுவம் இருக்க வேண்டும் என்ற நோக்கத்தில் இவ்வாறு தவறாக பேசிவருகிறது. பல மாநிலங்களில் அக்னிபாத் திட்டத்தில் 4 வருடம் கழித்து வரும் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்கப்படும் எனக் கூறியுள்ளனர்.