திண்டுக்கல்:எதிர்கட்சிகளை முடக்குவதற்காக, பாஜகவுக்கு எதிராக செயல்படும் அரசியல் தலைவர்களை சட்ட சிக்கல்களில் சிக்க வைத்து, அவர்களை செயல்படாமல் ஆக்குவதற்கான வேலையை பாஜக அரசு செய்து வருகிறது என சிவகங்கை எம்பி கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம், இன்று (செவ்வாய்க்கிழமை)பழனி முருகன் கோயிலில் சாமி தரிசனம் செய்தார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்து அவர் கூறியதாவது, “என்ஐஏ என்பது பயங்கரவாதத்துக்கு (Terrorism) எதிராக நடக்கும் செயல்களை தடுப்பதற்காகவும், அதனால் வரும் விளைவுகளை விசாரிப்பதற்காகவும் உருவாக்கப்பட்ட பிரிவு.
ஆனால், தற்போது அதை வைத்து அரசியல் கட்சிகள், அரசியல் தலைவர்கள், முதலமைச்சர் மீது விசாரணைக்கு, துணைநிலை ஆளுநர் பரிந்துரை செய்கிறார் என்றால், அரசியலுக்காக பழிவாங்குவது என்பது தான் அர்த்தம். கர்நாடகாவில் மேகதாது அணை கட்டியேத் தீருவோம் என்பது கர்நாடகா அரசின் முடிவு. தமிழ்நாட்டில், தமிழக அரசு என்ன முடிவு எடுக்கிறதோ, அதற்கு காங்கிரஸ் கட்சி ஒத்துழைக்கும். தமிழ்நாட்டின் உரிமைகளை பாதுகாக்க காங்கிரஸ் உறுதுணையாகவும் இருக்கும்” எனத் தெரிவித்தார்.
தேர்தலில் காங்கிரஸ் கட்சி மூன்று இலக்க எண்ணை எட்டாது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளது குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு, “வருகின்ற ஜூன் 4ஆம் தேதி தேர்தல் முடிவு தெரியும். ஆசை, பேராசை, கற்பனைக்கு எல்லாம் இப்போதைக்கு பதில் சொல்ல முடியாது” என்றார்.