புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம், மழவராயன் பட்டியில் சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து, ஆறு லட்சம் ரூபாய் மதிப்பில் கலையரங்கம் கட்டப்பட்டது. இதனை சிவகங்கை எம்பி கார்த்தி சிதம்பரம் திறந்து வைத்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய எம்பி கார்த்தி சிதம்பரம், “பாஜக கூட்டணி வைக்காத மாநிலங்களில், தங்களுடைய வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளனர். வேட்பாளர் பட்டியலை முன்கூட்டியே அறிவிப்பதால், அவர்கள் முந்திச் செல்வதாக அர்த்தம் கிடையாது. ஹால் டிக்கெட் முன்பே கொடுத்து விட்டதால், அவர்கள் தேர்வு எழுத முடியாது. தேர்வு நேரத்தில் மட்டும்தான் ஹால் டிக்கெட் பயன்படுத்தி தேர்வு எழுத முடியும்.
திமுக - காங்கிரஸ் கூட்டணி இழுபறி: திமுக கூட்டணிக்குள் எந்த விதமான குழப்பமும் கிடையாது. தொடர்ந்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. விரைவில் சுமூக தீர்வு ஏற்படும். திமுக - காங்கிரஸ் கூட்டணி 39 தொகுதிகளிலும் வெற்றி பெறும். திமுக - காங்கிரஸ் கூட்டணி வலுவாக உள்ளது. அதிமுக தங்களுடைய கட்சியைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்று என்னுடைய விருப்பம்.
தமிழ்நாட்டில் பாஜக ஓட்டு சதவீதம்: பாஜகவிற்கு வாக்கு சதவீதம் எவ்வளவு என்பதை மே மாதம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பின்னர் தெரிந்துவிடும். எதற்காக இவ்வளவு அவசரப்படுகிறார்கள் என்பது தெரியவில்லை.
கண்டா வரச் சொல்லுங்க போஸ்டர்: என்னைத்தான், தற்போது நீங்கள் பார்த்து விட்டீர்களே. நாடாளுமன்ற உறுப்பினர் தங்களுடைய கடமையைச் செய்கிறார்களா, இல்லையா என்பதைப் பார்க்க வேண்டுமே தவிர, அவர்கள் எல்லா தெருவுக்கு வந்தனரா, எல்லா வீதிக்கு வந்தனரா என்று பார்ப்பது சிரமமான காரியம் என்றார்.
பிரதமர் மோடி வருகை: பிரதமர் மோடி தமிழகத்திற்கு எவ்வளவு முறை வந்தாலும், பெரும் தாக்கத்தை ஏற்படுத்த முடியாது. பாஜக தமிழகத்தைப் பொறுத்தவரை நிராகரிக்கப்பட வேண்டிய கட்சி. காங்கிரஸ் கட்சி இருந்தபோது சராசரி பொருளின் விலை என்ன என்பதையும், தற்போது சராசரி பொருளின் விலை என்ன என்பதையும் மக்கள் ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும்.