தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஹோட்டல் உரிமையாளர் கொலை வழக்கு.. பிரபல ரவுடிக்கு ஆயுள் தண்டனை! - நாகர்கோவில் நீதிமன்றம்

Kanniyakumari Court Order: நாகர்கோவில் அருகே ஹோட்டல் உரிமையாளர் கொலை செய்த வழக்கில் பிரபல ரவுடி மணிகண்டனுக்கு ஆயுள் தண்டனை விதித்து நாகர்கோவில் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

நாகர்கோவில் நீதிமன்றம்
ரவுடி மணிகண்டன்

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 22, 2024, 4:10 PM IST

கன்னியாகுமரி:நாகர்கோவில் அடுத்த பறக்கை சிடிஎம் புரத்தைச் சேர்ந்தவர் மைதீன் அப்துல்காதர் (40). ஹோட்டல் நடத்தி வரும் இவரைக் கடந்த 2013 ஆம் ஆண்டு, பறக்கை செட்டி தெருவைச் சேர்ந்த மணிகண்டன் மற்றும் அவருடைய நண்பர்கள் அர்ஜுன், சதீஷ் உட்பட ஐந்து பேர் கொண்ட கும்பல் கடத்திச் சென்று கொலை செய்துள்ளனர்.

இது குறித்து, மைதீன் அப்துல்காதரின் மனைவி கொடுத்த புகாரின் பேரில், மணிகண்டன் உட்பட 5 பேர் மீது சுசீந்திரம் காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர். தொடர்ந்து, அவர்களிடம் நடத்திய விசாரணையில், மணிகண்டனின் சகோதரர் ரமேஷ் மாற்று மதத்தைச் சேர்ந்த பெண் ஒருவரைக் காதலித்து திருமணம் செய்துள்ளார். இதில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக ரமேஷ் கொலை செய்யப்பட்டுள்ளார்.

இதையடுத்து, ரமேஷ் முதலாம் ஆண்டு நினைவு தினத்தை ஒட்டி அப்பகுதியில் சுவரொட்டி ஒட்டப்பட்டது. அந்த வகையில், மைதீன் அப்துல் காதரின் கடையிலும் அஞ்சலி சுவரொட்டி ஒட்டப்பட்டது. இதற்கு மைதீன் அப்துல் காதர் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதில், மைதீன் அப்துல் காதருக்கும், மணிகண்டனுக்கும் இடையில் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இதன், காரணமாக மணிகண்டன் உள்பட 5 பேர் சேர்ந்து அப்துல் காதரை கடத்தி கொலை செய்தது தெரியவந்தது. இது குறித்த வழக்கு நாகர்கோவில் கூடுதல் அமர்வு விரைவு நீதிமன்றத்தில் நடந்து வந்தது.

பின்னர், இந்த கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட மணிகண்டன் உட்பட ஐந்து பேரும் ஜாமீனில் வெளி வந்தனர். இதனையடுத்து, நாகர்கோவில் பூச்சாத்தாங் குளத்தைச் சேர்ந்த சரண் (25) என்பவரைக் கொலை செய்த வழக்கில் மணிகண்டன் கோட்டார் போலீசாரால் கைது செய்யப்பட்டு, மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்நிலையில், மைதீன் அப்துல் காதர் கொலை செய்யப்பட்ட வழக்கு தொடர்பான விசாரணை நாகர்கோவில் கூடுதல் அமர்வு விரைவு நீதிமன்றத்தில் நடைபெற்றது. இதில், வழக்கை விசாரித்த நீதிபதி ஜோசப் ஜாய், குற்றம் சாட்டப்பட்ட மணிகண்டனுக்கு ஆயுள் தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்தும் தீர்ப்பளித்தார். மேலும், அபராதம் கட்ட தவறினால், கூடுதலாக ஒரு ஆண்டு கடுங்காவல் சிறைத் தண்டனை விதிக்கப்படும் என்றார்.

இந்தக் கொலை வழக்கு தொடர்பாக மணிகண்டனின் நண்பரான அர்ஜுன் மீது விசாரணை நடைபெற்று வருகிறது. மீதமுள்ள மூன்று பேரும் விடுவிக்கப்பட்டுள்ளனர். ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ள மணிகண்டன் பிரபல ரவுடியாவார். இவர் மீது கோட்டார், சுசீந்திரம் உள்ளிட்ட பல்வேறு காவல் நிலையங்களில் கொலை மற்றும் அடிதடி வழக்குகள் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:திருவண்ணாமலை அருகே டிராக்டருடன் கார் மோதி விபத்து..! திருமணத்திற்குச் சென்ற 4 பேர் பலி..!

ABOUT THE AUTHOR

...view details