சென்னை:சென்னை பெசன்ட் நகர் எலியட்ஸ் கடற்கரையில் 'Men in pink' என்ற தலைப்பில் விழிப்புணர்வு நடைபயணம் (Walkathon) நடைபெற்றது. இதில், பெண்களுக்கான மார்பக புற்றுநோய் (Breast cancer) குறித்த விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்தும் வகையில் நடந்த இந்த வாக்கத்தானை, நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கொடி அசைத்து துவக்கி வைத்தார். மேலும், இதில் பிங்க் நிறத்தில் உடை அணிந்து ஆண்கள், பெண்கள் என ஏராளமானோர் பங்கேற்றனர்.
அதனைத் தொடர்ந்து நிகழ்ச்சி மேடையில் பேசிய கனிமொழி, "இந்தியாவில் நுரையீரல் புற்றுநோய், கருப்பை வாய் புற்றுநோய்க்கு அடுத்ததாக மிகத் தீவிரமாக இருந்து வருவது மார்பக புற்றுநோய் தான். அதனால், மார்பக புற்றுநோய் குறித்து பெண்களுக்கு அதிகமாக விழிப்புணர்வு இருக்க வேண்டும். வீட்டில் உள்ள கணவர், குழந்தைகளுக்கு ஆரோக்கியம் பாதிக்கப்படும் வேளையில் பெண்கள் கவலைப்படுகின்றனர்.
இதையும் படிங்க: இப்படியும் நடக்குமா? பெண்ணின் வயிற்றில் இருந்த 3 கிலோ முடியை அகற்றிய மருத்துவர்கள்..முடி உண்ணும் நோயை பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா?
ஆனால் பெண்கள் அவர்கள் குறித்து கவலை கொள்ளாமல், ஆரம்ப கால கட்டத்தில் உள்ள நோய் பாதிப்புகளை கண்டறிந்து கொள்ளாமல் இருந்து விடுகின்றனர். பெண்கள் தங்கள் ஆரோக்கியத்தை காக்க அவர்கள் தானாகவே மருத்துவமனைகளை நாடுவதில்லை. ஆகையால், ஆண்கள் தங்கள் குடும்பங்களில் உள்ள தாய், மனைவி உள்ளிட்ட பெண்கள் குறித்து கவலை கொள்ள வேண்டும். ஆண்கள் அவர்களின் குடும்பத்தில் உள்ள பெண்களின் ஆரோக்கியத்தை உறுதிப்படுத்த முனைப்பு காட்ட வேண்டும்.
பெண்களைப் போலவே ஆண்களுக்கும் மார்பக புற்றுநோய் பாதிப்பு ஏற்படுவதால், ஆண்களும் இதில் விழிப்புடன் செயல்பட வேண்டும். ஆண்களும் மார்பக புற்றுநோய் பற்றிய விழிப்புணர்வின் முக்கியத்துவத்தையும், நோயின் ஆரம்ப கண்டுபிடிப்பு செய்யப்படுவதற்கான தேவையையும் உணர வேண்டும்" எனத் தெரிவித்தார்.
ஈடிவி பாரத் தமிழ்நாடு (ETV Bharat Tamil Nadu) ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணையஇங்கே க்ளிக் செய்யவும்