தேனி: தமிழ்நாட்டில் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 19ஆம் தேதி ஒரே கட்டமாக தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் நடைபெற உள்ளது. இந்நிலையில், பல்வேறு அரசியல் கட்சியினரும் தற்போது தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில், தேனி நாடாளுமன்றத் தொகுதியில் திமுக வேட்பாளர் தங்க தமிழ்ச்செல்வனை ஆதரித்து திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி, கம்பத்தில் நேற்று பிரசாரம் மேற்கொண்டு 'உதயசூரியன்' சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.
அப்போது பிரசாரத்தில் பேசிய கனிமொழி எம்.பி, “மக்களை சந்திக்க இருந்த உள்துறை அமைச்சர் அமித்ஷா இங்கு வரவில்லை. எத்தனை முறை இங்கு வந்தாலும் ஒரு வாக்கும் கிடைக்காது என்பதால் அவர் இங்கு வருவதில்லை. தமிழ்நாட்டில் தாமரை என்றும் மலராது. இனிமேல், இந்தியாவிலும் மலராது. சிறுபான்மையினர் மக்களின் சகோதரர்கள் நாங்கள் என்று எடப்பாடி கே.பழனிசாமி கூறுகிறார்.
ஆனால், பாஜகவுடன் சேர்ந்து சிஏஏ சட்டத்திற்கு (CAA) வாக்களித்த போது, சிறுபான்மையினர் சகோதரர்களை மறந்து விட்டீர்களா? என்று எடப்பாடி பழனிசாமியை நோக்கி கேள்வி எழுப்பினார்.