தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சாம்சங் ஊழியர்கள் போராட்டத்தில் மாவோயிஸ்ட்டுகள் ஊடுருவலா? - காஞ்சிபுரம் போலீஸ் பரபரப்பு விளக்கம்! - SAMSUNG WORKERS PROTEST

போராட்டத்திற்கு சென்ற சாம்சங் ஊழியர்களை காஞ்சிபுரம் போலீசார், தடுத்து நிறுத்தி பேருந்தில் அடையாள அட்டை சோதனை செய்த வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பேருந்தில் சோதனை செய்த காவலர்
பேருந்தில் சோதனை செய்த காவலர் (Credit - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 9, 2024, 2:00 PM IST

Updated : Oct 9, 2024, 2:28 PM IST

காஞ்சிபுரம் :காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரத்தில் 'சாம்சங் இந்தியா எலக்ட்ரானிக்ஸ் பிரைவேட் லிமிடெட்' தொழிற்சாலை இயங்கி வருகிறது. இங்கு ஏசி, பிரிட்ஜ், வாஷிங் மெஷின் போன்ற மின்னணு சாதனங்கள் தயாரிக்கப்படுகின்றன. 1,500க்கும் மேற்பட்ட நிரந்தர தொழிலாளர்கள் பணியாற்றி வருகிறார்கள். இவர்களில் சுமார் 900 பேர் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

சாம்சங் ஊழியர்கள் போராட்டம்:'சாம்சங் இந்தியா தொழிலாளர் சங்கம்' (சிஐடியு) எனும் பெயரில் கடந்த ஜூன் மாதம் தொழிற்சங்கத்தைத் தொடங்கி, தொழிற்சங்க அங்கீகாரம், ஊதிய உயர்வு, 8 மணி நேரம் வேலை உள்ளிட்ட 8 அம்ச கோரிக்கைகளை தொழிற்சாலை நிர்வாகத்திடம் முன்வைத்துள்ளனர். ஆனால், நிர்வாகம் இதையெல்லாம் ஏற்றுக்கொள்ளவில்லை என்றும், அடிபொடியாக ஒரு சங்கத்தை உருவாக்கி அதில் சிஐடியு சங்க உறுப்பினர்களை இணைய வலியுறுத்திவதாகக் கூறி கடந்த 9ஆம் தேதி முதல் 29 நாட்களாக தொடர் வேலை நிறுத்தப் போராட்டத்தில் தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகிறார்கள்.

குழு அமைத்து பேச்சுவார்த்தை:29 நாட்களாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தொழிலாளர்களிடம் போராட்டத்தை கைவிட வேண்டும் என 6 முறை பல்வேறு கட்டங்கள் பேச்சுவார்த்தை நடத்திய பிறகும் தோல்வியில் முடிந்தது.

சாம்சங் ஊழியர்களிடம் சோதனை மேற்கொண்ட வீடியோ (Credit - ETV Bharat Tamil Nadu)

அதனைத் தொடர்ந்து, இந்த பிரச்னைக்கு தீர்வு காண வேண்டுமென தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவின் பெயரில், சிறு, குறு தொழில்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வி.கணேசன், தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா ஆகியோர் கொண்ட குழு அமைக்கப்பட்டது.

7ஆம் கட்ட பேச்சுவார்த்தை: அரசு சார்பில் அமைக்கப்பட்ட குழு, தொழிற்சாலை நிர்வாகம் மற்றும் தொழிலாளர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு தொழிலாளர்களின் தொழிற்சங்கம் அமைப்பது தொடர்பான கோரிக்கை தவிர்த்து மற்ற அனைத்து கோரிக்கைகளையும் நிறைவேற்ற தயாராக உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில், அமைச்சர்கள் குழு, தொழிலாளர் நலத்துறை அமைச்சர் அலுவலகத்தில், தொழிற்சங்கத்தினர், நிர்வாகம் மற்றும் தொழிலாளர்களிடம் 7ஆம் கட்ட பேச்சுவார்த்தையில் ஈடுபட்டது. அந்த பேச்சுவார்த்தையிலும் உடன்பாடு எட்டப்படாமல் தோல்வியில் முடிந்தது.

இதனை அடுத்து, தொழிலாளர்கள் சார்பில் சிஐடியு தொழிற்சங்கம் அமைக்க வேண்டும் என்ற பிரதான கோரிக்கையை வலியுறுத்தி தொடர்ச்சியாக சாம்சங் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதையும் படிங்க:தீவிரமடையும் சாம்சங் தொழிலாளர்கள் போராட்டம்; வேலை நிறுத்தம் அறிவித்துள்ள சிஐடியு!

போலீசார் சோதனை:போராட்டம் நடைபெறும் பகுதியில் நேற்று (அக்.08) சாலையோரம் இருபுறங்களும் காவலர்களை பணியில் அமர்த்தி இருசக்கர வாகனத்திலும், தனியார் பேருந்து மற்றும் அரசு பேருந்தில் சாம்சங் ஊழியர்கள் உடை அணிந்து வருபவர்களிடம் அடையாள அட்டையை சோதனை செய்த பின்னரே அவர்களை காவலர்கள் போராட்டத்திற்கு அனுமதித்துள்ளனர்.

வைரல் வீடியோ: தனியார் பேருந்தில் செல்லும் சாம்சங் ஊழியர்களை காவலர் ஒருவர் வலுக்கட்டாயமாக அடையாள அட்டையை காண்பிக்க செய்து, சோதனை செய்துள்ளார். அப்போது, சாம்சங் ஊழியர்கள் மற்றும் அந்த பேருந்தில் இருந்த பொதுமக்கள், காவல்துறையினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட வீடியோ தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சாம்சங் போராட்டத்தில் மாவோயிஸ்ட்டுகள்?:இந்த வீடியோ தொடர்பாக காஞ்சிபுரம் மாவட்ட காவல்துறை தெரிவித்தபோது, "சமூக விரோதிகள் மற்றும் மாவோயிஸ்ட்டுகள் சிலர் தொழிலாளர்கள் என்ற போர்வையில் உள்நுழைந்து அவர்கள் வன்முறை போராட்டமாகவும், அரசுக்கு எதிரான போராட்டமாகவும் திசை திருப்ப முயலுவதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டது. மேலும், உண்மையான சாம்சங் நிறுவனத்தின் ஊழியர்களை போலீசாா் தடுக்கவில்லை" என விளக்கம் அளித்துள்ளனர்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு (ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணையஇங்கே க்ளிக் செய்யவும்

Last Updated : Oct 9, 2024, 2:28 PM IST

ABOUT THE AUTHOR

...view details