சென்னை:கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணம் தொடர்பான வழக்கை சிபிஐக்கு மாற்றக் கோரிய வழக்குகள், பொறுப்புத் தலைமை நீதிபதி கிருஷ்ணகுமார் மற்றும் நீதிபதி பாலாஜி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, வால்பாறை தொகுதி முன்னாள் எம்எல்ஏ ஸ்ரீதரன் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் சி.எஸ்.மணி மற்றும் பாஜக வழக்கறிஞர் மோகன்தாஸ் ஆகியோர் ஆஜராகி, “மாவட்ட நிர்வாகம், உள்ளூர் அரசியல்வாதிகள் துணை இல்லாமல் கள்ளச்சாராயம் உற்பத்தி செய்து கொண்டு வந்து விற்க முடியாது.
ஆனால் போலீசார், அரசியல்வாதிகள் தொடர்பில்லை என அரசு கூறுகிறது என்றனர். மேலும், கடந்த 2022-2023ஆம் ஆண்டு மதுவிலக்கு அமலாக்கத்துறை கொள்கை விளக்கக் குறிப்பில், கள்ளச்சாராயத்தை ஒழிக்க ஆண்டுக்கு 9 கோடி விழிப்புணர்வு, முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.
இதை முறையாக செலவிட்டிருந்தால் நிச்சயமாக எந்த மரணமும் நிகழ்ந்திருக்காது. மாநில அரசின் தோல்வியைக் காட்டுகிறது” என வாதிட்டார். கள்ளச்சாராய உற்பத்தியாளர்கள், விற்றவர்கள் மீது மட்டும் தான் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதே தவிர, தொடர்புடைய அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்படவில்லை எனவும் அவர்கள் குறிப்பிட்டனர்.