கள்ளக்குறிச்சி:கள்ளக்குறிச்சி மாவட்டம், கருணாபுரம் பகுதியில் கள்ளச்சாராயம் அருந்தி 30க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த விவகாரம் சிபிசிஐடி-க்கு மாற்றப்பட்டுள்ள நிலையில், விசாரணை அதிகாரியான கோமதி தலைமையிலாம சிபிசிஐடி போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளனர்.
முன்னதாக விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அவசர கூட்டம் நடைபெற்றது. இதனையடுத்து சிபிசிஐடி போலீசார் விசாரணையைத் தொடங்கியுள்ளனர். கள்ளக்குறிச்சி காவல்நிலையத்திலிருந்து இந்த விசாரனையை தொடங்கியது.
கள்ளச்சாராயம் அருந்தியதால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 35-ஆக அதிகரித்துள்ளது. தற்போது கள்ளக்குறிச்சி, சேலம், விழுப்புரம், திருவண்ணாமலை மாவட்டங்களில் உள்ள அரசு மருத்துவமனைகள் மற்றும் புதுச்சேரி ஜிப்மர் அரசு மருத்துமனைகளியில் 80-க்கும் மேற்பட்டோர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். பலர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வரும் பலி எண்ணிக்கை உயரும் என அஞ்சப்படுகிறது.
மூவர் கைது:கள்ளச்சாராயம் அருந்தி 30க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த விவகாரத்தில் கண்ணுகுட்டி (எ) கோவிந்தராஜ் அவரது மனைவி விஜயா, அவரது தம்பி தாமோதரன் ஆகிய மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் முக்கிய குற்றவாளியான சின்னத்துரையை போலீசார் தேடி வருகின்றனர்.
மேலும் சாராயம் விற்ற கோவிந்தராஜ் என்பவரிடம் இருந்து 200 லிட்டர் சாராயம் கைப்பற்றப்பட்டு விழுப்புரம் மண்டல தடய அறிவியல் ஆய்வுக் கூடத்துக்கு அனுப்பப்பட்டது. சோதனையில் சாராயத்தில் மெத்தனால் கலந்துள்ளது கண்டறியப்பட்டுள்ளது. மேலும் இவ்வழக்கில் தொடர்புடையதாக 10க்கும் மேற்பட்டவர்களுடன் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் என தகவல்கள் வெளியாகியுள்ளது.
தமிழ்நாடு முழுவதும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள இச்சம்பவத்தையடுத்து, கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் ஷ்ரவன்குமார் ஜடாவத், பணியிடமாற்றம் செய்யப்பட்டு, அவருக்கு பதிலாக எம்.எஸ்.பிரசாந்த் புதிய மாவட்ட ஆட்சித் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். அதே போல் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் சமய் சிங் மீனா, தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டு, ரஜத் சதுர்வேதி, கள்ளக்குறிச்சி மாவட்டக் காவல் கண்காணிப்பாளராகப் பணியமர்த்தப்பட்டுள்ளார்.
இந்த விவகாரம் சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ள நிலையில், விசாரணை அதிகாரியான ஏடிஎஸ்பி கோமதி தலைமையிலான 5 குழுக்கள் தற்போது விசாரனையை தொடங்கியுள்ளன. மேலும் இந்த விவகாரம் தொடர்பாக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெறவுள்ளது.
இதையும் படிங்க:"கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரத்தில் 2 திமுக எம்எல்ஏக்களுக்கு தொடர்பு" - அன்புமணி ராமதாஸ் பகீர் புகார்!