விழுப்புரம்: உளுந்தூர்பேட்டை நகர அதிமுக மாவட்ட எம்.ஜி.ஆர் இளைஞர் அணி செயலாளரும், முன்னாள் அரசு வழக்கறிஞருமான கிருஷ்ணன் நேற்றைய தினம் விழுப்புரம் தனியார் மருத்துவமனை தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த நிலையில், மருத்துவமனையில் இருந்து அவர் பேசிய வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாக பரவிவருகிறது. அந்த வீடியோவில் அவர் கூறியதாவது, "உளுந்தூர்பேட்டை அதிமுக நகர செயலாளர் துரை மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்ட அதிமுக செயலாளர் குமரகுரு ஆகிய இருவரும் என்னை வீட்டிற்கு வருமாறு அழைத்தனர்.
அவர்களுடைய அழைப்பின் பேரில் அதிமுக மாவட்ட செயலாளர் குமரகுருவின் வீட்டிற்கு, நானும் என்னுடைய மனைவியும் சென்றோம். அப்போது பத்துக்கும் மேற்பட்ட நிர்வாகிகள் அங்கே இருந்தனர் அப்போது குமரகுரு என்னை ஆபாசமான வார்த்தைகளால் திட்டியதோடு, எனது மனைவியின் கண் முன்னே எனது கழுத்தை நெரித்து தாக்கி கொலை மிரட்டல் விடுத்தார்.
எனக்கும், எனது குடும்பத்தினரின் உயிருக்கு ஏதேனும் ஆபத்து ஏற்பட்டால் அதற்கு குமரகுரு மற்றும் அவரது மகன் சதீஷ் ஆகியோரே பொறுப்பு. மேலும் என்னை எடப்பாடி பழனிசாமி மற்றும் விழுப்புரம் மாவட்ட செயலாளர் சண்முகம் காப்பாற்ற வேண்டும்.
என் குடும்பத்துக்கு நீதி வேண்டும். இனிமேல் எந்த ஒரு அதிமுக தொண்டருக்கும் எனக்கு ஏற்பட்டதுபோன்ற பாதிப்பு ஏற்படக் கூடாது" என கண்ணீர் விட்டு அழுதபடி கூறியுள்ளார்.