ஈரோடு:கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கள்ளச்சாராயம் அருந்தியவர்களில் இதுவரை 53 பேர் உயிரிழந்துள்ள நிலையில் 140 பேர் தொடர் சிகிச்சையில் இருந்து வரும் சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், டாஸ்மார்க் மதுபானம் மற்றும் கள்ளச்சாராயம் ஆகியவற்றிற்கு பதிலாக பனை, தென்னை மரங்களில் இருந்து இறக்கப்படும் 'கள்’ பானங்களுக்கு தமிழக அரசு அனுமதி அளிக்க வேண்டும் என குரல் எழுந்து வருகிறது.குறிப்பாக, தமிழகத்தில் மதுவிலக்கிற்கு சாத்தியமில்லை எனவும் இதற்கு 'கள்' தான் தீர்வு என தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறியிருந்தார்.
இந்நிலையில் தமிழக கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் 'கள்' நல்லசாமி ஈடிவி பாரத்திற்கு சிறப்பு பேட்டியளித்துள்ளார். அதில், "உலகம் முழுவதும் மதுவிலக்கு தோற்றுப் போய் இருந்தாலும் அரசின் கடமை மதுவிலக்கை நோக்கியே இருக்க வேண்டும், மதுவை நோக்கி இருக்கக் கூடாது. கள் இறக்குவதும் அருந்துவதும் இந்திய அரசியலமைப்புச் சட்டம் மக்களுக்கு கொடுத்துள்ள உணவு தேடும் உரிமை.
இந்தியாவில், பீகார் மாநிலத்தில் ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பு மதுவிலக்கு கொண்டுவரப்பட்டது. அப்போது சாராயத்திற்கும், மது வகைகளுக்கும், அந்நிய தயாரிப்புகளுக்கும், அயல் நாட்டு மது வகைகளுக்கும் தடை விதிக்கப்பட்டது, ஆனால் கள்ளுக்கு மட்டும் விலக்கு அளிக்கப்பட்டது. ஆனால் அப்போதும் பீகார் மாநிலத்தில் மதுவிலக்கு கொண்டுவரப்பட்ட பின்பும் கள்ளச்சாராயத்தால் உயிரிழப்பு ஏற்பட்டது.
நிவாரணம் தவறான முன்னுதாரணம்: பீகார் அரசாங்கம் நிவாரணம் வழங்க மறுத்துவிட்டது. இது தவறான முன் உதாரணம் ஆகிவிடும் சாவையும், சாராயத்தையும் ஊக்கிவிப்பதாக இருக்கும் எனக் கூறி நிவாரணம் வழங்க மறுத்துவிட்டது. ஆனால் தமிழகத்தில் கடந்த சில ஆண்டுகளில் மரக்காணத்தில் 23 பேர் கள்ளச்சாராயம் அருந்தி பலியாகி உள்ளனர்.