சென்னை:கடந்த 2017ஆம் ஆண்டு ராஜ்குமார் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், "சென்னை உயர்நீதிமன்ற வளாகம் குப்பை, கூளமாகக் காட்சி அளிப்பதாகவும், திட மற்றும் திரவ கழிவுகளை முறையாக கையாண்டு, வளாகத்தை தூய்மையாக வைத்திருக்க வேண்டும்" என்றும் கோரிக்கை விடுத்திருந்தார்.
இந்த வழக்கு சுமார் ஆறு ஆண்டுகளாக நிலுவையில் இருந்த வந்த நிலையில், தலைமை நீதிபதி (பொறுப்பு) கிருஷ்ணகுமார், நீதிபதி குமரேஷ்பாபு ஆகியோர் அடங்கிய அமர்வு இன்று விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கு தொடர்பாக 2021ஆம் ஆண்டு தமிழக அரசு தரப்பில் ஒரு அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில், சென்னை உயர்நீதிமன்ற வளாகம் தூய்மையாகப் பராமரிக்கப்படுவதில்லை என்றே கூறப்பட்டிருந்தது.
அதனடிப்படையில், இன்றைய வழக்கு விசாரணையின் போது மனுதாரர் தரப்பில், உயர்நீதிமன்ற வளாகத்திற்குள் 35க்கும் மேற்பட்ட நாய்கள் நடமாட்டம் உள்ளது. மேலும் வளாகம் குப்பை, கூளமாகக் காட்சி அளிக்கிறது என்று தெரிவிக்கப்பட்டது.