தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

"பெரியார் சீர்திருத்தவாதி?.. சீமான் பேசியது தப்பே கிடையாது" - ஜான்பாண்டியன் கருத்து! - JOHN PANDIAN

பெரியார் ஒன்றும் சீர்திருத்தவாதி அல்ல; தமிழ்நாட்டில் உள்ள பல மாவட்டங்களிலும் இன்றும் தீண்டாமை பிரச்னை இருந்து வருகிறது. அதனால், சீமான் பேசியது சரியே என ஜான்பாண்டியன் தெரிவித்துள்ளார்.

ஜான்பாண்டியன்
ஜான்பாண்டியன் (ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 21, 2025, 1:32 PM IST

திருநெல்வேலி:தமிழக மக்கள் முன்னேற்றக் கழக தலைவர் ஜான்பாண்டியன் திருநெல்வேலி பாளையங்கோட்டை எம்.கே.பி நகரில் உள்ள தென் தமிழக தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், "ஈரோடு இடைத்தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி முடிவே எங்கள் முடிவு. நாங்கள் தேசிய ஜனநாயக கூட்டணியில் நீடித்து வருகிறோம். இந்த தேர்தலில் பணம் விளையாடிக் கொண்டிருக்கிறது. ஆறு மாதத்தில் சட்டமன்றத் தேர்தல் வரவிருப்பதால் இதில் கவனம் செலுத்தவில்லை.

ஆளும் ஆட்சியை கண்டு எங்களுக்கு பயமில்லை. மக்கள் மனதில் இடைத்தேர்தலில் ஆளுங்கட்சி தான் வெற்றி பெறும் என்ற எண்ணம் உள்ளது. தேர்தல் ஆணையமும் ஆளுங்கட்சிக்கு சாதகமாக செயல்படுகிறது. பண விநியோகத்தைக் கண்டு கொள்வது கிடையாது. இதுவரை புகார்கள் இருந்தாலும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றார்.

விஜய் வரட்டும் பின்னர் பேசலாம்

அதைத் தொடர்ந்து பேசிய அவர், "ஒரே நாடு ஒரே தேர்தல் வந்தால் இலவச வாக்குறுதிகள் குறையும், ஊழல் ஒழியும். அரசியலின் தத்துப் பிள்ளையாக விஜய் வந்துள்ளார். திமுகவின் செயல்பாடு சரியில்லாத நிலையில் தான் விஜயை கண்டு அவர்கள் அஞ்சுகிறார்கள். அரசியலில் போட்டியிட்டு வரட்டும் விஜய் குறித்துப் பேசலாம்.

ஜான்பாண்டியன் பேட்டி (ETV Bharat Tamil)

திமுக வெறுப்பு அரசியல்

ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தினால் மாநில அரசுக்கு பலவீனமாக அமையும் என்பதால்தான், அதனை அவர்கள் செய்ய மறுக்கிறார்கள். வரும் ஆகஸ்ட் மாதத்தில் மதுரை, திண்டுக்கல், திருச்சிராப்பள்ளி ஆகிய மூன்றில் ஒரு மாவட்டத்தில் மிகப்பெரிய அளவிலான மாநாட்டை நடத்த தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் திட்டமிட்டுள்ளது.

ஆனால், எத்தனை போராட்டங்கள் நடத்தினாலும், அரசு செவிசாய்க்கப் போவது கிடையாது. திமுக கூட்டணியில் உள்ள கட்சிகள் போராடினாலும் அதேநிலை தான் இருந்து வருகிறது. மத்திய அரசு என்ற சொல்லைக் கூட மாற்றி ஒன்றிய அரசு என சொல்லி வெறுப்பு அரசியலை திமுக செய்கிறது. மத்திய அரசு கொடுக்கும் அனைத்திற்கும் முறையாக மாநில அரசு கணக்கு கொடுப்பது கிடையாது.

இதையும் படிங்க:ஜகபர் அலி கொலை வழக்கு: வெளிப்படையான விசாரணை வேண்டும்; வேண்டுகோள் வைத்த விஜயபாஸ்கர்!

பெரியார் சீர்திருத்தவாதி கிடையாது

பெரியார் பெயரைப் பயன்படுத்தி ஓட்டுக்காக அவரை பெரிய ஆளாக காட்டுகிறார்கள். அவர் எந்த சாதனையையும் செய்யவில்லை. ஆனால், தீண்டாமையை ஒழித்தவர் என்கிறார்கள். தற்போதும் தீண்டாமை தலைதூக்கிக் கொண்டு தான் உள்ளது. அதனால், பெரியார் தான் தீண்டாமையை ஒழித்தார் என்பதை ஏற்க முடியாது. பெரியார் ஒன்றும் தமிழகத்தின் சீர்திருத்தவாதி கிடையாது.

சீமான் பேசியது சரியே!

காலம் மாறியதும் எழுச்சி உருவானது, தானாக தீண்டாமை ஒழியத் தொடங்கியது. பெரியார் வந்ததால் எதுவும் நடக்கவில்லை. தற்போதும் கூட ராமநாதபுரம், சிவகங்கை, திருவாரூர் போன்ற இடங்களில் தீண்டாமை உள்ளது. பெரியாரின் வாரிசு என சொல்பவர்கள் தீண்டாமை பாதிக்கப்பட்ட பகுதிக்கு சென்று அதனை ஒழிக்க எந்த நடவடிக்கையும் எடுக்கப் போவது கிடையாது. இந்த நிலையில், சீமான் பேசியது சரியே. அதில் எந்த தப்பும் இல்லை.

தமிழகத்தில் நீதிபதிகள் ஜாதி பார்த்து தான் தண்டனை கொடுக்கிறார்கள். தமிழகத்தில் உள்ள கீழ் நீதிமன்றம் உயர்நீதிமன்றம் என அனைத்திலும் ஜாதி பார்த்து தான் எனக்கு தண்டனை வழங்கப்பட்டது. உச்சநீதிமன்றத்தில் கடுமையாக வாதாடி நான் நிரபராதி என விடுதலை பெற்றேன். நீதிமன்றமே தானாக எடுத்து விசாரிக்கும் வழக்குகள் கூட ஜாதிகள் பார்த்து தான் எடுக்கப்படுகிறது. திருவள்ளுவர் காவிச்சாயம் பூசியதாக சொல்கிறார்கள். ஆனால், திமுக அரசு அவருக்கு வெள்ளை ஆடை உடுத்தி பாதிரியாராக மாற்றியுள்ளது" எனத் தெரிவித்தார்.

ABOUT THE AUTHOR

...view details