திருநெல்வேலி:தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத் தலைவர் ஜான் பாண்டியன் தலைமையில், நெல்லை பாளையங்கோட்டையில் உள்ள தென் தமிழக தலைமையகத்தில் கட்சியின் செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த ஜான் பாண்டியன், "மாஞ்சோலை தேயிலைத் தோட்டத்தை அரசு எடுத்து நடத்த வேண்டும் எனவும், மாஞ்சோலை மக்களை மலைப் பகுதியிலிருந்து அப்புறப்படுத்தும் நோக்கில் அனைவரும் செயல்பட்டு வருகிறார்கள் என்றும், தேயிலைத் தோட்ட நிறுவனத்திடம் கையூட்டு பெற்றுக் கொண்டு ஆளுங்கட்சியினரே மக்களை அங்கிருந்து அப்புறப்படுத்த நினைக்கிறார்கள் எனக் குற்றம் சாட்டினார்.
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் உண்மை குற்றவாளிகளைக் கண்டறிய வேண்டும் எனவும், இந்த கொலை வழக்கு சம்பந்தமாக சிபிஐ விசாரணைக்கு அரசு உத்தரவிட வேண்டும் என வலியுறுத்தினார். தமிழகத்தில் நடக்கும் தொடர் கொலைகளுக்கு அதிகாரிகளும் உடந்தையாக உள்ளதாகத் தெரிவித்தார். இருப்பினும், அதிகாரிகளை மாற்றினால் மட்டும் கொலைகள் நடக்காமல் இருக்காது எனவும், அதிகாரிகள் மாற்றத்திற்கு பின்னரும் தொடர் கொலைகள் நடந்து வருகிறதாக தெரிவித்தார்.
கடந்த அதிமுக ஆட்சியில் தனக்கு அளிக்கப்பட்ட பாதுகாப்பை திமுக அரசு அமைந்த பிறகு மாற்றி விட்டதாக கூறினார். மேலும் தலைவர்களின் பாதுகாப்பு குறைபாடு இந்த அரசில் அதிகரித்துள்ளதாகவும், தமிழகத்தில் உள்ள அரசியல் தலைவர்களைக் கொலை செய்தால் பெயர் வாங்கி விடலாம் என்ற குறுகிய கண்ணோட்டத்துடன் சிலர் சுற்றி வருகின்றனர் என்று தெரிவித்தார். இதன் காரணமாக தனக்கு மட்டுமல்லாமல், தமிழகத்தின் முக்கிய தலைவர்களாக இருக்கும் சீமான், திருமாவளவன், டாக்டர் கிருஷ்ணசாமி உள்ளிட்ட தலைவர்களுக்கு உரிய பாதுகாப்பை அரசு அளிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.