திருநெல்வேலி:ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் தமிழ் மாநில பொதுக்குழு கூட்டம் திருநெல்வேலியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் கட்சியின் மாநில தலைவர் மணிநந்தன் தலைமையில் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த நிர்வாகிகள் மாநில நிர்வாகிகள், பல்வேறு பிரிவு சார்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தில் மாநிலம் முழுவதும் கட்சி கொடியேற்றுவது, மாவட்டத்திற்கு 200 கொடி கம்பங்கள் நிறுவுவது என முடிவு செய்யப்பட்டு பத்துக்கும் மேற்பட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த ஐக்கிய ஜனதா தளம் மாநில தலைவர் மணிநந்தன்,"தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும்.
பீகாரில் எங்கள் கட்சியின் தலைவர் நிதீஷ் குமார் 6 ஆண்டுகளுக்கு மேலாக பூரண மதுவிலக்கை அமல்படுத்தி சிறப்பான ஆட்சி செய்து வருகிறார். மக்களின் சராசரி ஆயுள் மது பழக்கத்தினால் குறைந்து கொண்டே போகிறது. ஏழை, எளிய மக்கள் மது குடிப்பதனால் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
ஐக்கிய ஜனதா தளம் மாநில தலைவர் மணிநந்தன் பேட்டி (Credits - ETV Bharat Tamil Nadu) நீதிமன்றம் நேரடியாக தலையிட்டு மதுவிலக்கு தொடர்பான நடவடிக்கைகளை அரசுக்கு அறிவுறுத்த வேண்டுமென கேட்டுக் கொண்டார். மதுவிலக்கு உடனடியாக அமல்படுத்த வலியுறுத்தி, மாவட்டம் தோறும் ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதையும் படிங்க :மதுவிலக்கை நடைமுறைப்படுத்தும் மாநிலங்களுக்கு கூடுதல் நிதிப் பகிர்வு: விசிக மது ஒழிப்பு மாநாட்டில் தீர்மானம்!
மது குடிப்பதனால் ஏற்படும் பிரச்னை தொடர்பாக விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் நடைப்பயணம் மேற்கொள்ளவும் பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. தமிழகத்தில் லஞ்சம் பெருகி வருகிறது. லஞ்சம் வாங்கும் அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். ஊழல் செய்தால் தியாகியாக தமிழகத்தில் சித்தரிக்கப்படுகிறார்கள். அரசு அனைத்துத் துறைகளிலும் ஊழலை ஒழிக்க கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வரும் 2026ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலை முன்வைத்து தமிழகம் முழுவதும் உறுப்பினர் சேர்க்கை முகாம்கள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. சட்டமன்றத் தேர்தலில் கட்டாயம் ஐக்கிய ஜனதா தளம் சார்பில் போட்டியிடுவோம். கூட்டணி தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தப்படும்.
கூட்டணி அமையவில்லை என்றால் 234 சட்டமன்றத் தொகுதிகளிலும், ஐக்கிய ஜனதா தளம் சார்பில் வேட்பாளர்கள் நிறுத்தப்படுவார்கள். மத்தியில் பாஜகவுடன் கூட்டணி அமைந்திருந்தாலும் தமிழகத்தில் மாநில நிர்வாகிகள் முடிவின் படி கூட்டணி அமைத்துக் கொள்ள முழு சுதந்திரம் வழங்கப்பட்டுள்ளது.
திராவிட கட்சிகளுடன் கூட்டணி வைக்க வாய்ப்பு ஏற்பட்டால் கட்டாயம் திமுகவுடன் கூட்டணி இருக்காது. 2026 சட்டமன்றத் தேர்தலில் நெல்லை சட்டமன்ற தொகுதி வேட்பாளராக மாவட்ட ஐக்கிய ஜனதா தளம் தலைவர் சோமசுந்தரம் போட்டியிடுவார்" என்று அறிவிப்பையும் வெளியிட்டார்.
ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits - ETV Bharat Tamil Nadu) ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்