மதுரை:நாடாளுமன்ற தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருப்பதாக கூறி ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி வழங்காமல் இருப்பது ஏற்புடையதல்ல எனவும், இதுகுறித்து சிவகங்கை மாவட்ட ஆட்சியர் உடனடியாக பரிசீலித்தி நாளைக்குள் (ஏப்.02) உரிய உத்தரவு பிரப்பிக்க வேண்டும் என்றும் உயர்நீதிமன்ற மதுரை கிளை இன்று (ஏப்.01) உத்தரவிட்டுள்ளது.
சிவகங்கை கோட்டூர் கிராமத்தை சேர்ந்த தியாகராஜன் தேவகோட்டை அருகே உள்ள, கோட்டூர் கிராமத்தில் கோயில் திருவிழாவை முன்னிட்டு மஞ்சுவிரட்டு / ஜல்லிக்கட்டு நடத்த கிராம மக்களுக்கு அனுமதி வழங்கி உத்தரவிட வேண்டும் என மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். இந்த மனு நீதிபதிகள் சுரேஷ் குமார், அருள் முருகன் ஆகியோர் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், சிவகங்கை மாவட்டத்தில் 8 கிராமங்களில் ஜல்லிகட்டு நடத்த அனுமதி வழங்கி அறிவிப்பானை வெளியிடப்பட்டது. 2017 ஆம் ஆண்டு அனுமதி வழங்கி வெளியிடப்பட்ட பட்டியலில் இந்த கிராமம் இல்லை. மேலும் தற்போது தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதால், சட்டம் ஒழுங்கு பிரச்சினையை கருத்தில் கொண்னு அனுமதி வழங்கவில்லை என கூறியுள்ளார்.
அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், இந்த கிராமத்தில் 25 ஆண்டுகளாக ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்று வந்தது. கொரோனா காலத்தில் தான் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறவில்லை. கடந்த ஆண்டு இந்த கிராமத்தில், அரசாணையின் படி ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது”, என்றார்.