திருநெல்வேலி:ஊட்டி நகராட்சி ஆணையராக இருந்த ஜஹாங்கீர் பாஷா என்பவர் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையில் சிக்கினார். கோயம்புத்தூர் ரயில் நிலையத்தில் வைத்து லஞ்ச ஒழிப்பு போலீசார் அவரை மடக்கி சோதனை செய்தபோது, கணக்கில் வராத ரூ.11.7 லட்சம் பணம் கட்டுகட்டாக வைத்திருந்தது தெரியவந்தது.
இதையடுத்து ஊட்டி நகராட்சி அலுவலகம் அழைத்து சென்று விசாரித்ததில் அந்த பணம் முறைகேடாக அவரது கையில் இருப்பது தெரியவந்தது. அதனையடுத்து லஞ்ச ஒழிப்பு போலீசார் அவர் மீது வழக்குப்பதிவு செய்த நிலையில் இச்சம்பவம் நடைபெற்ற இரண்டே வாரத்தில் தற்போது ஜஹாங்கீர் பாஷா திருநெல்வேலி மாநகராட்சி உதவி ஆணையராக நியமிக்கப்பட்டிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
குறிப்பாக, லஞ்ச ஒழிப்பு போலீசார் ஜஹாங்கீர் பாஷா மீது வழக்குப்பதிவு செய்து சுமார் 15 நாட்களே ஆன நிலையில் மீண்டும் அவருக்கு பொறுப்பு வழங்கப்பட்டிருப்பது ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளது. வழக்கமாக இது போன்ற லஞ்ச ஒழிப்பு சோதனையில் சிக்கி வழக்குப்பதிவு செய்யப்பட்டால் பல்வேறு கட்ட விசாரணைக்கு பிறகே, சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பொறுப்பு வழங்கப்படும்.
ஆனால், மிக குறுகிய காலத்தில் ஜஹாங்கீர் பாஷாவுக்கு மீண்டும் பொறுப்பு கிடைத்தது எப்படி என்ற கேள்வி எழுந்துள்ளது. குறிப்பாக, ஜஹாங்கீர் பாஷா ஏற்கனவே திருநெல்வேலி மாநகராட்சியில் பல ஆண்டுகள் பணிபுரிந்துள்ளார்.
இதையும் படிங்க :சுமார் ரூ.12 லட்சம் லஞ்சம்; சுத்துப் போட்டுப் பிடித்த லஞ்ச ஒழிப்புத் துறை!