தமிழ்நாடு

tamil nadu

ஜாபர் சாதிக் சகோதரருக்கு ஆகஸ்ட் 27 வரை நீதிமன்றக் காவல்! - Mohammad Salim custody

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 13, 2024, 7:33 PM IST

Jaffer Sadiq brother Mohammad Salim custody: சட்ட விரோத பணப் பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட ஜாபர் சாதிக்கின் சகோதரர் முகமது சலீமை, ஆகஸ்ட் 27ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயர் நீதிமன்றம் (கோப்புப்படம்)
சென்னை உயர் நீதிமன்றம் (கோப்புப்படம்) (credit - ETV Bharat Tamil Nadu)

சென்னை:போதைப் பொருள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட தமிழ் திரைப்படத் தயாரிப்பாளரும், திமுக முன்னாள் நிர்வாகியுமான ஜாபர் சாதிக்கிற்கு எதிராக, சட்ட விரோத பணப் பரிவர்த்தனையில் ஈடுபட்டதாக கூறி அமலாக்கத் துறையும் தனியாக வழக்குப் பதிவு செய்து, ஜூன் 26ஆம் தேதி கைது செய்தது.

இந்நிலையில், ஜாபர் சாதிக்கின் சகோதரர் முகமது சலீம், விசாரணைக்காக நேற்று அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜராகி இருந்தார். விசாரணைக்குப் பின் அவரை அமலாக்கத்துறை கைது செய்தது. இதையடுத்து, சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி முன்பு முகமது சலீமை நேரில் ஆஜர்படுத்தினர்.

அப்போது, அமலாக்கத்துறை தரப்பில் ஆஜரான சிறப்பு வழக்கறிஞர் என்.ரமேஷ், போதைப்பொருள் கடத்தல் மூலம் கிடைத்த கோடிக்கணக்கான பணத்தை போலி நிறுவனங்கள் துவங்கி அதில் முதலீடு செய்துள்ளதாகவும், அதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளதாகவும், சட்டவிரோத பணப் பரிமாற்றத்தில் அவர் ஈடுபட்டதற்கான ஆவணங்களைக் கைப்பற்றி உள்ளதாகவும் தெரிவித்தார்.

சலீம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் காளிசரண் விசாரணைக்கு ஆஜாராகி முழு ஒத்துழைப்பு அளித்த நிலையில், அவரது கைது தேவையற்றது என்று தெரிவித்தார். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, முகமது சலீமை ஆகஸ்ட் 27ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிட்டுள்ளார். அதேநேரம், முகமது சலீமை 15 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி அமலாக்கத்துறை தரப்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த மனுவிற்கு பதிலளிக்கும்படி முகமது சலீம் தரப்பிற்கு உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையை நாளை (ஆகஸ்ட் 14) தள்ளி வைத்துள்ளார்.

இதையும் படிங்க:“பேரறிவாளன் தாய் போல சவுக்கு சங்கர் தாயாரும் சட்டப் போராட்டம் நடத்துகிறார்”.. கோவையில் வழக்கறிஞர் கூறியது என்ன?

ABOUT THE AUTHOR

...view details