சென்னை: கடந்த 2011ஆம் ஆண்டிற்குப் பிறகு அரசு ஊழியர்கள் அரசுப் பணியாளர்கள் ஆசிரியர்களுக்கான புதிய உரிமைகளோ, சலுகைகளோ இந்த காலகட்டத்தில் பெரிய அளவில் வழங்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது. மேலும், இதன் தொடர்ச்சி தான் 2016ஆம் ஆண்டும் தொடர்ந்தது, அதற்குப் பிறகு ஜாக்டோ ஜியோ அமைப்பு பல்வேறு போராட்டங்களையும், பல்வேறு நிகழ்வுகளையும் நடத்தி இருந்தது.
அந்த சமயத்தில் எதிர்க்கட்சித் தலைவராக இருந்த மு.க.ஸ்டாலின் எங்களுக்கு திமுக ஆட்சி அமைந்த உடன் அனைத்து திட்டங்களையும் செயல்படுத்தித் தருவதாக வாக்குறுதி அளித்திருந்தார். ஆனால், அதுபோன்ற எந்த ஒரு நடவடிக்கையும் தற்பொழுது அரசு எடுக்காததால் வேறு வழியின்றி போராட்டங்களைக் கையில் எடுக்க உள்ளதாக ஜாக்டோ ஜியோ அமைப்பு அறிவித்துள்ளது.
இது தொடர்பாக, ஜாக்டோ ஜியோ அமைப்பு தலைமைச் செயலகத்தில் முதலமைச்சரின் தனி செயலாளர்கள், தலைமைச் செயலாளர், நிதித்துறை செயலாளர், மனிதவள மேலாண்மைத் துறை செயலாளர் ஆகியோருக்கு போராட்ட அறிவிப்புகளைக் கொடுத்துள்ளது. அதில், முதற்கட்டமாக வருகின்ற 21ஆம் தேதி முதல் 24ஆம் தேதி வரை மாநிலம் முழுவதும் ஜாக்டோ ஜியோ அமைப்பினுடைய கோரிக்கைகளை வலியுறுத்தி ஆசிரியர் அரசு ஊழியர் சந்திப்பு பிரச்சார இயக்கம் நடத்துவது.
மேலும், வருகின்ற 30ஆம் தேதி மாவட்ட தலைநகரங்களில் மறியல் போராட்டம் நடத்துவது. அதனைத் தொடர்ந்து, பிப்ரவரி 5ஆம் தேதி முதல் 9ஆம் தேதி வரை அரசியல் கட்சித் தலைவர்களை நேரில் சந்தித்து ஆதரவுக்குக் கோருவது. மேலும், பிப்ரவரி 10ஆம் தேதி மாவட்ட அளவில் வேலைநிறுத்த போராட்ட, ஆயத்த மாநாடு நடத்துவது. அதனைத் தொடர்ந்து, 26ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தை நடத்துவது என ஜாக்டோ ஜியோ அமைப்பு அறிவித்துள்ளது.
இதில், தமிழக அரசு எங்களுடைய முக்கிய கோரிக்கைகளைப் பரிசீலித்து நல்ல முடிவு எடுக்க வேண்டும். அப்படி இல்லாத பட்சத்தில் போராட்ட களத்தில் நிற்பதைத் தவிர வேறு வழியில்லை எனவும் ஜாக்டோ ஜியோ அமைப்பு தெரிவித்துள்ளது.
இதில், குறிப்பாக 10 கோரிக்கைகளை முன்னிறுத்தி இந்த போராட்டங்கள் நடத்தப்பட உள்ளதாக ஜாக்டோ ஜியோ அமைப்பு அறிவித்துள்ளது.
- பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும்.
- காலவரையின்றி முடக்கி வைக்கப்பட்டுள்ள சரண் விடுப்பு ஒப்படைப்பு உயர்கல்விக்கான ஊக்க ஊதிய உயர்வு ஆகியவற்றை உடனடியாக வழங்கிட வேண்டும்.
- இடைநிலை ஆசிரியர்களுக்கு உயர் பள்ளி மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு உடற்கல்வி இயக்குநர் மற்றும் உடற்கல்வி ஆசிரியர்களுக்கு மத்திய அரசுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும்.
- அரசின் பல்வேறு துறைகளில் 30% மேலாக காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பிடுவதற்கான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும்.
- 21 மாத ஊதிய மாற்ற நிலுவைத் தொகை அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் அரசுப் பணியாளர்கள் ஆகியோருக்கு மறுக்கப்பட்டுள்ளதை உடனடியாக வழங்கிட வேண்டும்.
- 2002 முதல் 2004ஆம் வரை தொகுப்பூதியத்தில் நியமனம் செய்யப்பட்ட ஆசிரியர்கள் அரசு ஊழியர்கள் மற்றும் அரசுப் பணியாளர்களின் பணிக் காலத்தினை அவர்கள் பணிகள் சேர்ந்த நாள் முதல் பணி வரன்முறை படுத்தி ஊதியம் வழங்க வேண்டும்.
- சாலைப் பணியாளர்களின் 41 மாத பணி நீக்கக் காலத்தினை முறைப்படுத்த வேண்டும்.
- உள்ளாட்சி அமைப்புகளில் பல்வேறு அரசுத் துறைகளில் தனியார் முகமை மூலம் பணியாளர் நியமனம் செய்வதை உடனடியாக தடை செய்திட வேண்டும்.
- முதுநிலை ஆசிரியர்கள் அனைத்து ஆசிரியர்கள் அரசு ஊழியர்கள் அரசுப் பணியாளர்கள் கண்காணிப்பாளர் தலைமைச் செயலகம் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் களப்பணியாளர்கள் பல்வேறு துறைகளில் உள்ள தொழில்நுட்ப ஊழியர்கள் உறுதி ஓட்டுநர்கள் ஆகியோருக்கான ஊதிய முரண்பாட்டினை களைய வேண்டும்.
- சிறப்பு காலமுரை ஊதியம் பெற்று வரும் சத்துணவு அங்கன்வாடி வருவாய் கிராம உதவியாளர்கள் ஊராட்சி செயலாளர்கள் ஊர்ப் புற நூலகர்கள் கல்வித்துறையில் பணியாற்றும் துப்புரவுப் பணியாளர்கள் தொகுப்பு ஊதியத்தில் பணியாற்றும் செவிலியர்கள் சிறப்பு ஆசிரியர்கள் பல்நோக்கு மருத்துவமனை பணியாளர்கள் ஆகியோருக்கு வரையறுக்கப்பட்ட ஊதியம் வழங்கிட வேண்டும்.
உள்ளிட்ட பத்து கோரிக்கைகளை அரசு நிறைவேற்ற வேண்டும் எனவும் ஜாக்டோ ஜியோ அமைப்பு அறிவித்துள்ளது.
இதையும் படிங்க:தொடர்ந்து தமிழகத்தைப் புகழும் பிரதமர் மோடி.. தமிழகத்தில் வாக்கு வங்கி உயருமா?