சென்னை:ஜாக்டோ ஜியோ அமைப்பின் சார்பில், ஒருங்கிணைப்பாளர்கள் வெங்கடேசன், தியாகராஜன் ஆகியோர் தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகுவை நேரில் சந்தித்து தபால் வாக்கு செலுத்துவதில் உள்ள சுணக்கங்கள் மற்றும் குளறுபடிகள் குறித்துப் பேசினர்.
கடந்த தேர்தல்களைப் போல் அல்லாமல் இந்த தேர்தலில் முதல் முறையாக வரும் ஏப்.16 ஆம் தேதி மாலை 5 மணி வரை மட்டுமே தபால் வாக்குகளை அந்தந்த பயிற்சி மையங்களில் (Facilitation Centre) மட்டுமே பெறவும், செலுத்தவும் முடியும் என்று தலைமைத் தேர்தல் அதிகாரி தீர்க்கமாகத் தெரிவித்தார். (கடந்த தேர்தல்களில் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நாளுக்கு முன்னாள் வரை தபால் வாக்குகளைச் செலுத்தலாம் என்று இருந்தது)
எனவே, இதுவரை தபால் வாக்குகளைப் பெறாதவர்கள் மற்றும் தபால் வாக்குகளைப் பெற்றுச் செலுத்தாதவர்கள் வரும் ஏப்.16 மாலை 5 மணிக்குள் அந்த பணியினை செய்து முடிக்கவும், அதற்குப் பிறகு தபால் வாக்குகளைப் பெறவும் செலுத்தவும் வாய்ப்பு இல்லை எனத் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.
EDC (Election Duty Certificate) பொறுத்தவரை அதுவும் ஏப்.16 மாலை 5 மணிக்குள் பயிற்சி நடைபெறும் மையங்களில் (Facilitation Centre) பெற்றுக் கொள்ளுமாறும் அறிவுறுத்தியுள்ளார். எனவே EDC சான்றிதழ்கள் பெறாதவர்களும் ஏப்.16 மாலை 5 மணிக்குள் பெற்றுக் கொள்ளவும். அடுத்த பயிற்சி வகுப்பு 18ஆம் தேதி நடைபெறும்.