சென்னை:தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மழை பெய்துள்ளது. புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவியது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதாவது, தமிழக உள் மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை அநேக இடங்களில் பொதுவாக இயல்பை விட 3 டிகிரி முதல் 4 டிகிரி செல்சியஸ் மிக அதிகமாக இருந்தது.
தமிழக கடலோரப்பகுதிகளில் இயல்பை விட அதிகமாகவும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இயல்பை ஒட்டியும் இருந்தது. அதிகபட்ச வெப்பநிலை ஈரோட்டில் 43.0 டிகிரி செல்சியஸ், வேலூரில் 41.9 டிகிரி செல்சியஸ், கரூர் பரமத்தியில் 41.5 டிகிரி செல்சியஸ், திருச்சியில் 41.3 டிகிரி செல்சியஸ், சேலம் மற்றும் திருத்தணியில் 41.2 டிகிரி செல்சியஸ், மதுரையில் (நகரம்) மற்றும் தருமபுரியில் 41.0 டிகிரி செல்சியஸ் மற்றும் திருப்பத்தூரில் 40.4 டிகிரி செல்சியஸ் பதிவாகியுள்ளது.
இதர தமிழக உள் மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் 38 டிகிரி முதல் 40 டிகிரி செல்சியஸ் வரை பதிவாகியுள்ளது. தமிழக கடலோரப்பகுதிகள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் 35 டிகிரி முதல் 39 டிகிரி செல்சியஸ் மற்றும் மலைப் பகுதிகளில் 24 டிகிரி முதல் 30 டிகிரி செல்சியஸ் பதிவாகியுள்ளது. சென்னை மீனம்பாக்கத்தில் 38.1 டிகிரி செல்சியஸ் மற்றும் நுங்கம்பாக்கத்தில் 35.8 டிகிரி செல்சியஸ் பதிவாகியுள்ளது.
அடுத்த 7 தினங்களுக்கான வானிலை முன்னறிவிப்பு மற்றும் எச்சரிக்கை:
- இன்று முதல் செவ்வாய்கிழமை வரை மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.
- ஏப்ரல் 24ம் தேதி முதல் 26ம் தேதி வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.
வெப்பநிலை பற்றிய முன்னறிவிப்பு: - அடுத்த 24 மணி நேரத்திற்கு அதிகபட்ச வெப்பநிலை வட தமிழக உள் மாவட்டங்களின் ஒருசில இடங்களில் 3 டிகிரி முதல் 5 டிகிரி செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை வட தமிழக உள் மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் ஒருசில இடங்களில் 39 டிகிரி முதல் 42 டிகிரி செல்சியஸ், இதர தமிழக மாவட்டங்களின் சமவெளி பகுதிகள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் 34 டிகிரி முதல் 39 டிகிரி செல்சியஸ் இருக்கக்கூடும்.
- நாளை முதல் ஏப்ரல் 24ம் தேதி வரை, அதிகபட்ச வெப்பநிலை சற்றே குறைந்து ஒருசில இடங்களில் இயல்பை விட 2 டிகிரி முதல் 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும்.