திண்டுக்கல்: நிலக்கோட்டையை அடுத்த கரியாம்பட்டியைச் சேர்ந்த சக்திவேல் (25) என்பவர், தண்ணீர் டேங்கர் லாரி ஓட்டுநராக உள்ளார். அதே பகுதியில் கரியாம்பட்டி அருகே உள்ள நடுப்பட்டியைச் சேர்ந்தவர் வேலு (20). வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்த இருவரும் அரசு கட்டிட காண்டிராக்டர் கிருஷ்ணனிடம் ஒரே இடத்தில் வேலை பார்த்து வந்துள்ளனர்.
இந்நிலையில், நேற்று மாலை (மே 6) நடுப்பட்டியில் நடைபெற்று வரும் சாக்கடை கட்டிடப் பணியின் காரணமாக, டேங்கர் லாரி மூலமாக தண்ணீர் கொண்டு வந்ததாகக் கூறப்படுகிறது. அப்போது, அப்பகுதி பெண்கள் டேங்கர் லாரியில் தண்ணீர் பிடித்துள்ளனர். அப்போது, கரியாம்பட்டியைச் சேர்ந்த டேங்கர் லாரி ஓட்டுநர் சக்திவேல் தண்ணீர் பிடித்துக் கொண்டிருந்த இளம் பெண் ஒருவரிடம் மொபைல் எண் கேட்டதாகக் கூறப்படுகிறது.
அப்பெண் உடனடியாக தனது உறவினர் விஜயிடம் கூறியதாகத் தெரிகிறது. அப்போது, அங்கு வந்த விஜய் தனது உறவினர் வேலுவைப் பார்த்து “கரியாம்பட்டியைச் சேர்ந்த டேங்கர் லாரி ஓட்டுநர் சக்திவேல், நமது ஊர் பெண்ணிடம் போன் நம்பர் கேட்டுள்ளார். அதற்கு நீங்கள் ஏன் சத்தம் போடவில்லை?” எனக் கேட்டுள்ளார்.
இதனையடுத்து, கரியாம்பட்டியைச் சேர்ந்த சக்திவேலும், நடுப்பட்டியைச் சேர்ந்த வேலுவும் ஒரே இடத்தில் வேலை பார்ப்பதால் அதுகுறித்து உரிமையாளர் கிருஷ்ணனிடம் கூறியதாகக் கூறப்படுகிறது. உடனடியாக உரிமையாளர் கிருஷ்ணன் கரியாம்பட்டி சக்திவேலுவை கடுமையாக எச்சரித்ததாகக் கூறப்படுகிறது.
இதில், ஆத்திரமடைந்த கரியாம்பட்டி சக்திவேல், நேற்று மாலை நடுப்பட்டியைச் சேர்ந்த வேலுவிடம் பேசி மது குடிக்க காட்டுப் பகுதிக்கு அழைத்துச் சென்று மது அருந்தியதாகக் கூறப்படுகிறது. அங்கு நடுப்பட்டி வேலுவை, சக்திவேலு, மருதை மற்றும் அவரது நண்பர்கள் சிலர், அந்த இளம் பெண்ணின் செல்போன் என்னை நீயே வாங்கிக்கொடு என்று கேட்டுத் தாக்கியதாகக் கூறப்படுகிறது.
அதிலிருந்து தப்பி வந்த வேலு, நடந்த சம்பவத்தை நடுப்பட்டி மக்களிடம் கூறியதையடுத்து, அவரது உறவினர்கள் விஜய், அழகுபாண்டி ஆகியோர்அவ்வழியாக வந்த சக்திவேலுவை கண்டித்துள்ளனர். இதில், இரு தரப்பினருக்கும் ஏற்பட்ட தகராறில் ஒருவருக்கொருவர் கடுமையாகத் தாக்கிக்கொண்டனர். இதில், கரியாம்பட்டி சக்திவேல் தரப்பினரால் நடுப்பட்டியைச் அழகுபாண்டி தலையில் இரும்புக் கம்பியால் தாக்கப்பட்டு மயங்கி விழுந்துள்ளார்.
இதனையடுத்து, அக்கம்பக்கத்தினர் அழகுபாண்டியை மீட்டு நிலக்கோட்டை அரசு மருத்துவமனை சிகிச்சைக்காகச் சேர்த்தனர். ஆனால், அழகுபாண்டியின் தலையில் பலத்த காயம் என்பதால், மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.