தேனி:பழனிசெட்டிபட்டியில் இலவசமாக கறி தர மறுத்த காரணத்தால், மயானத்தில் புதைக்கப்பட்ட பெண்ணின் சடலத்தை எடுத்து வந்து கடையின் முன்பு போட்டுவிட்டு தப்பி ஓடிய நபரால் பரபரப்பு ஏற்பட்டது.
தேனி மாவட்டம் பழனிசெட்டிபட்டியில் கறிக்கடை வைத்து நடத்தி வருபவர் மணியரசன். இவரது கடைக்கு, சுடுகாட்டில் பணிபுரியும் குமார் என்பவர், அடிக்கடி வந்து கறி வாங்கிச் செல்வதை வழக்கமாக வைத்துள்ளார். அது மட்டுமின்றி, குமாருக்கு மணியரசன் கறியை அவ்வப்போது இலவசமாக கொடுத்து வந்ததாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், நேற்று முன்தினம் (பிப்.9) காலையில் கறிக்கடைக்கு வந்த குமார், மணியரசனை மிரட்டி இலவசமாகக் கறி கேட்டதாகவும், ஞாயிற்றுக்கிழமை கூட்டம் அதிகமாக இருந்த காரணத்தால் இலவசமாக கறி கொடுக்க மணியரசன் மறுத்ததாகவும், அதனால் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.
அதனால், ஆத்திரமடைந்து அங்கிருந்து கிளம்பிச் சென்ற குமார், சிறிது நேரம் கழித்து சுடுகாட்டில் ஏற்கனவே புதைக்கப்பட்டிருந்த ஒரு பெண்ணின் சடலத்தை எடுத்து வந்துள்ளார். பின்னர், அந்த சடலத்தைக் கடையின் முன்பு போட்டுவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றதாகக் கூறப்படுகிறது. அதனால், அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
பின்னர், இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த பழனிசெட்டிபட்டி போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, கடை முன்பு போடப்பட்ட சடலம் யாருடையது? எங்கிருந்து கொண்டு வரப்பட்டது? எனப் பல கோணங்களில் விசாரணை மேற்கொண்டனர். அதனைத் தொடர்ந்து, கடையின் முன்பு இருந்த சடலத்தை அங்கிருந்து அப்புறப்படுத்தியுள்ளனர்.