நெல்லை: கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த நாராயணன் இஸ்ரோ தலைவராக சமீபத்தில் பொறுப்பேற்றார். எளிய குடும்ப பின்னணியில் இருந்து படித்து, முன்னேறி நாட்டின் உயரிய பதவியை நாராயணன் அடைந்துள்ளார். இஸ்ரோ தலைவராக பொறுப்பேற்ற முதல் முறையாக சொந்த ஊரான மேலக்காட்டுவிளைக்கு வந்த நாராயணனுக்கு நேற்று முன்தினம் பாராட்டு விழா நடைபெற்றது.
இதனைத்தொடர்ந்து நெல்லை மாவட்டம் காவல்கிணறு அரசு உயர்நிலைப்பள்ளியில் மாணவர்களுடன் நடைபெற்ற கலந்துரையாடல் நிகழ்வில் இஸ்ரோ தலைவர் நாராயணன் பங்கேற்றார். பின்னர் அரசு பள்ளி மாணவர்கள் மத்தியில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி மைய தலைவர் நாராயணன் பேசும் போது, ”ககன்யான் திட்டம் இந்தியாவின் கனவு திட்டமாகும். தற்போது நான்கு படிநிலைகளில் செயல்படுத்தப்பட்டு வரும் இத்திட்டத்தில் விண்வெளிக்கு மனிதர்களை அனுப்புவதற்கு முன்பாக மூன்று கட்டங்களில் பல்வேறு சோதனைகளான சுற்றுச்சூழல், ஆக்சிஜன், கார்பன், காலநிலை, வெப்பநிலை போன்றவை பல கட்டங்களாக ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு வருகிறது.
சோதனை செய்த பின்னரே நான்காவதாக மனிதர்களை பத்திரமாக விண்வெளிக்கு அனுப்பி, மீண்டும் பூமிக்கு கொண்டு வருவதே ககன்யான் திட்டமாகும். இன்னும் சில மாதங்களில் ககன்யான் திட்டத்தின் முதலாவது ராக்கெட் சோதனை நடத்தப்பப்படும். இதேபோல் மாணவர்கள் உயர்ந்த சிந்தனையை வளர்த்துக் கொள்ள வேண்டும்.