திருநெல்வேலி: நெல்லை மேலப்பாளையம் பகுதியில் அமைந்துள்ள அன்னை ஹாஜிரா தனியார் பெண்கள் கல்லூரியின் 16வது பட்டமளிப்பு விழா இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக ஆதித்யா எல் 1 (Aditya L1) திட்ட இயக்குனர் நிகார் சாஜி மற்றும் கோலாலம்பூர் மெட்ரோ செக்யூரிட்டி சர்வீஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் அப்துல் காதர் பின் அசன் அலி ஆகியோர் கலந்து கொண்டனர்.
விழாவில் தேர்ச்சி பெற்ற 260 மாணவிகளுக்கு பட்டங்கள் மற்றும் பதக்கங்கள் வழங்கப்பட்டன. முன்னதாக, இந்திய விண்வெளி துறையின் ஆதித்யா எல் 1 திட்ட இயக்குனர் நிகார் ஷாஜி விழாப்பேருரை ஆற்றினார். அப்போது பேசிய அவர், "பெண் கல்வி மற்றும் அதிகாரம் ஆகியவை சமூகத்தை வடிவமைக்கின்றன.
நூற்றாண்டுகளுக்கு முன்னால் இருந்து ஆண்களுக்கு பின்தங்கியவர்களாகவே பெண்கள் பல வழிகளில் இருந்துள்ளனர். வாக்களிப்பதற்கு, சொந்தமாக சொத்துக்கள் வாங்குவதற்கு, சுயதொழில் அல்லது சொந்தமாக பணி செய்வதற்கு பெண்கள் அனுமதிக்கப்படாமல் இருந்து வந்தனர்.
என்னுடைய அனுபவத்தில் ஒன்றை பகிர்ந்து கொள்கிறேன். நான் பெண் என்ற ஒரே காரணத்திற்காக மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படிப்பதற்கான அனுமதி மறுக்கப்பட்டது. பெண்களுக்கு பல பகுதிகளில் தற்போதும் அதிகாரம் மற்றும் அனுமதி இல்லாமல் இருந்து வருகிறது.
ஒரு ஆண் கல்வி அறிவைப் பெறும் பொழுது தனிநபரின் கல்வியறிவு உயர்கிறது. அதே, ஒரு பெண் கல்வி அறிவை பெறும்போது ஒரு குடும்பத்தின் கல்வி அறிவு பெருக்கம் அடைகிறது. தற்போதைய நிலையில், பெண்களின் கல்வி அறிவு 77 சதவீதமாகவும், அதே நேரத்தில் ஆண்களின் கல்வியறிவு 85 சதவீதத்திற்கு மேலாகவும் இருந்து வருகிறது.
கல்வி என்பது பெண்களின் உரிமைகள், கண்ணியம் மற்றும் பாதுகாப்பிற்காக அதிகம் பயன்படுகிறது. சமத்துவமின்மை செயல்பாட்டை கல்வி குறைப்பதுடன் குடும்பத்தின் நிலையை மேம்படுத்துவதற்கான வழிமுறையை வகுக்கிறது. படித்த பெண்கள் பொருளாதாரத்தில் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்குகின்றனர். பெண்களின் திறன் மற்றும் மேம்பாட்டின் மூலமே இந்தியா வளர்ந்த நாடாக மாற முடியும்" எனக் கூறினார்.