திருநெல்வேலி: தமிழகத்தில் எம்ஜிஆர், கருணாநிதி, ஜெயலலிதா, சிவாஜி, விஜயகாந்த் வரிசையில் நடிகர் விஜயும் திரைத்துறையிலிருந்து அரசியலுக்கு வந்துள்ளார். அவருக்கு முன்பாக அரசியலில் குதித்த நடிகர் விஜயகாந்த், தேமுதிக என்ற கட்சியை தொடங்கி மிகக்குறுகிய காலத்தில் எதிர்க்கட்சித் தலைவராகும் அளவிற்கு அரசியலில் தடம் பதித்தார்.
அடுத்த குறுகிய காலத்தில் அவர் அரசியலில் வீழ்ச்சியும் அடைந்தார். இருப்பினும், விஜயகாந்த் கட்சி தொடங்கி சந்தித்த முதல் சட்டமன்றத் தேர்தலில் அவர் மட்டும் சட்டமன்ற உறுப்பினராக வெற்றி பெற்றதோடு, அவரது கட்சி சுமார் 8 சதவீதம் வாக்குகளை பெற்றிருந்தது. எனவே, எம்ஜிஆர், ஜெயலலிதாவுக்குப் பிறகும் தமிழகத்தில் சினிமா நடிகர்களுக்கு அரசியலில் மக்கள் தொடர்ந்து ஆதரவளிப்பது தெரிய வந்தது.
ரஜினியின் அரசியல் பின்வாங்கல்:எனவே, விஜயகாந்த்தை தொடர்ந்து நடிகர்கள் மத்தியில் அரசியலுக்கு வர வேண்டும் என்ற மோகம் அதிகரித்துக் கொண்டே இருந்தது. குறிப்பாக, தமிழக திரைத்துறையின் சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் நடிகர் ரஜினிகாந்த் பல ஆண்டுகளாக அரசியலுக்கு வருவார் என அவரது ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்தனர். அவரும் அரசியலுக்கு வருவதைப் போன்று பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டார். குறிப்பாக, சில ஆண்டுகளுக்கு முன்பு அரசியலில் வருவதை உறுதி செய்துவிட்டு தமிழகம் முழுவதுமுள்ள தொண்டர்களைச் சந்தித்தார்.
ஆனால், இறுதியில் வழக்கம்போல ரஜினிகாந்த் அரசியல் முடிவில் பின் வாங்கியதோடு, இனிமேல் அரசியலுக்கு வரப்போவதில்லை எனக் கூறி முழுக்கு போட்டுவிட்டார். அதேநேரம், திரைத்துறையில் நடிகர் ரஜினிகாந்த்துக்கு போட்டியாக கருதப்படும் நடிகர் விஜய் தமிழகத்தின் அடுத்த சூப்பர் ஸ்டார் என்று அவரது ரசிகர்களால் அழைக்கப்படுகிறார்.
மாணவர்களும், விஜயும்: திரைத் துறையில் உச்சத்தில் இருக்கும் நடிகர் விஜய், எந்த நேரமும் அரசியலுக்கு வரலாம் என பரபரப்பாக பேசப்பட்டது. குறிப்பாக, விஜய் மக்கள் இயக்கம் சார்பில் கடந்த சில ஆண்டுகளாகவே பல்வேறு சமூக நலன் சார்ந்த நிகழ்ச்சிகளை முன்னெடுத்து வந்தனர். மேலும், கடந்த ஆண்டு தமிழகம் முழுவதுமுள்ள 234 தொகுதிகளிலிருந்து 10ஆம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் முதல் மூன்று இடங்களைப் பிடித்த மாணவர்களை சென்னைக்கு அழைத்து விஜய் அவர்களுக்கு நிதி வழங்கி பாராட்டினார்.
அந்த நிகழ்ச்சியில் அவர் சில அரசியல் சார்ந்த கருத்துக்களை பேசியிருந்தார். எனவே, விரைவில் அவர் அரசியலுக்கு வருவார், கட்சி தொடங்குவார் என பேசப்பட்டது. அதன்படி, கடந்த பிப்ரவரி 2ஆம் தேதி விஜய் ''தமிழக வெற்றிக் கழகம்'' என்ற புதிய கட்சியைத் தொடங்கினார். அதேநேரம், அவர் கட்சி தொடங்கிய சில மாதங்களில் நாட்டின் முக்கிய தேர்தலான நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்ற நிலையில், அதில் தனது கட்சி போட்டியிடவில்லை என தெரிவித்தார்.
இந்நிலையில், 2026 சட்டமன்றத் தேர்தலை இலக்காக வைத்து விஜய் அரசியல் நகர்வுகளை நகர்த்தி வருகிறார். விஜய் கட்சி தொடங்கினாலும்கூட தற்போது வரை பெரிய அளவில் தனது கட்சி சார்பில் ஆர்ப்பாட்டங்களையோ அல்லது பொது நிகழ்ச்சிகளையோ நடத்தவில்லை. வரும் செப்டம்பர் மாதம் அவரது கட்சியின் முதல் மாநாடு நடைபெற இருப்பதாக கூறப்படுகிறது.
விஜய் பிறந்தநாள்: இதுபோன்ற நிலையில் தான் கடந்த ஜூன் 22ஆம் தேதி விஜயின் பிறந்தநாள் கோலாகலமாக அவரது ரசிகர்களால் கொண்டாடப்பட்டது. குறிப்பாக, இந்த ஆண்டு அவர் அரசியல் கட்சி தொடங்கிய பிறகு கொண்டாடப்படும் முதல் பிறந்தநாள் என்பதால், பல்வேறு மாவட்டங்களில் ரசிகர்கள் கோயில்களில் தங்கத்தேர் இழுத்தும், அன்னதானம் வழங்கியும் பிறந்த நாளைக் கொண்டாடி மகிழ்ந்தனர்.
நெல்லையில் பரபரப்பு போஸ்டர்:அதிலும் குறிப்பாக, மாநகரில் தொடங்கி குக்கிராமங்கள் வரை விஜய்க்கு வாழ்த்து தெரிவித்து பிரமாண்ட போஸ்டர்களை ஒட்டி விளம்பரப்படுத்தினர். அந்த வகையில், நெல்லை மாநகரப் பகுதியில் விஜயின் தவெக தொண்டரணி சார்பில் பல்வேறு இடங்களில் போஸ்டர் ஒட்டப்பட்டு இருந்தது.
அதில் நடிகர் விஜய் எம்ஜிஆர் தோற்றத்தில் காட்சி அளிப்பது போன்ற புகைப்படத்தை அச்சடித்தது அதிமுக தொண்டர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. நெல்லை பேட்டை சுத்தமல்லி போன்ற இடங்களில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டரில் விஜய் எம்ஜிஆர் போன்ற தொப்பி அணிந்தும், கருப்பு கண்ணாடி போட்டு கழுத்தில் துண்டு போட்டு முழுக்கை சட்டையுடன் கையில் வாட்ச் கட்டியிருப்பது, கைக்குட்டை வைத்திருப்பது என தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி அச்சு அசலாக விஜயை எம்ஜிஆராகவே மாற்றி அந்த புகைப்படம் பிரசுரிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுக பல்வேறு அணிகளாக பிரிந்து வலுவிழந்து காணப்படுவதாக கூறப்படுகிறது. நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் கூட அதிமுக பல்வேறு தொகுதிகளில் படுதோல்வி அடைந்துள்ளது. எனவே, இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி தமிழகத்தில் உள்ள பிற கட்சிகள் அதிமுக வாக்கு வங்கிகளை இழுக்க முயன்று வருவதாக கூறப்படுகிறது. குறிப்பாக, தமிழகத்தில் கால் பதிக்க போராடி வரும் தேசிய கட்சியான பாஜக, அதிமுக வாக்கு வங்கியை தங்கள் பக்கம் இழுக்கும் வகையில் அக்கட்சியின் தலைவர்கள் பேசி வருகின்றனர்.
நயினார் நாகேந்திரன் தேர்தல் அரசியல்: பிரதமர் மோடியில் தொடங்கி, மாநில தலைவர் அண்ணாமலை வரை எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா வரை பொது மேடையில் பேசினர். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், யார் கட்சி தொடங்கினாலும் எம்ஜிஆரை பின்பற்றி தான் அவர்கள் வளர வேண்டும் என அதிமுக முக்கிய நிர்வாகிகள் தெரிவித்திருந்தனர். அந்த அளவுக்கு தமிழக அரசியலில் எம்ஜிஆரின் அடையாளம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வரும் நிலையில், நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் திருநெல்வேலி தொகுதியில் போட்டியிட்ட பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன், வெளிப்படையாக தேர்தல் களத்தில் எம்ஜிஆர் புகைப்படங்களையும், அவரது பாடல்களையும் பயன்படுத்துவேன் என கூறியிருந்தார்.
ஏற்கனவே அதிமுகவில் மாவட்டச் செயலாளர், அமைச்சர் உட்பட முக்கிய பதவிகளை வகித்த நயினார் நாகேந்திரன், ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுகவில் இருந்து விலகி பாஜகவில் இணைந்தார். தற்போது அவர் பாஜகவில் இருந்தாலும்கூட, நெல்லை மாவட்டத்தில் கிராமப்புறங்களில் இன்னும் அவரை அதிமுககாரராகவே மக்கள் பார்க்கின்றனர்.
எனவே, இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி எம்ஜிஆரை முன்னிலைப்படுத்தினால் அதிமுகவின் வாக்குகளும் தனக்கு கிடைக்கும் என நயினார் நாகேந்திரன் கணக்கு போட்டார். அவர் பிரச்சாரத்திற்குச் செல்லும் இடங்களில் பிரச்சார வாகனத்தில் முழுக்க முழுக்க எம்ஜிஆர் பாடலை ஒலிக்கவிட்டார். அதன் விளைவாக தேர்தலில் அவர் வெற்றி பெறாவிட்டாலும் கூட, அதிமுகவை பின்னுக்கு தள்ளி இரண்டாம் இடத்திற்கு முன்னேறினார்.
அதிமுக வாக்குகள் ஈர்ப்பு?:கடந்த சட்டமன்றத் தேர்தலின் போது திருநெல்வேலி சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்ட நயினார் நாகேந்திரன் அமோக வெற்றி பெற்றார். ஆனால், அப்போது அதிமுக பாஜகவுடன் கூட்டணி அமைத்து இருந்தது. அதேநேரம், இந்த தேர்தலில் அதிமுக பாஜகவுடன் கூட்டணியில் இல்லாததால் அவர் வெற்றி பெற முடியாது என அரசியல் விமர்சகர்கள் கருதினர். இருப்பினும், அதிமுகவின் வாக்கு வங்கிகளை கவர்ந்து வெற்றி பெற்று விடலாம் என நயினார் நாகேந்திரன் கடுமையாக முயற்சி செய்தார்.
இறுதியில் அவர் வெற்றி பெறாவிட்டாலும் கூட, தனது எண்ணப்படி அதிமுகவை விட அதிக வாக்குகளைப் பெற்றிருந்தார். இது போன்ற அதிமுக வாக்குகளை ஈர்ப்பதற்காக ஏற்கனவே பாஜக பல்வேறு முயற்சிகளை கையாண்டு வரும் சூழ்நிலையில், சமீபத்தில் கட்சி தொடங்கிய விஜயின் தவெக நிர்வாகிகளும், எம்ஜிஆர் படத்தை தங்கள் கட்சி விளம்பரத்தில் முன்னிலைப்படுத்தி வருவது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும், பாஜகவை தொடர்ந்து விஜயின் கட்சி நிர்வாகிகளும், அதிமுக வாக்குகளை கவர்வதற்காகவே இது போன்ற நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது. இது குறித்து அறிந்து கொள்வதற்காக போஸ்டர் ஒட்டிய நெல்லை தொண்டரணி நிர்வாகி ஜாகிரை தொலைபேசியில் தொடர்பு கொண்ட போது ''நான் பிஸியாக இருக்கிறேன். நேரம் கிடைக்கும் போது இது குறித்து பேசுகிறேன்'' என்று இணைப்பை துண்டித்து விட்டார். அதேபோல், நெல்லை மாவட்ட தலைவர் சாஜியை தொடர்பு கொண்ட போது, அவரும் இது குறித்து சரியான பதில் அளிக்கவில்லை.
கல்வி விருதுகள் விழா: இந்த நிலையில், சென்னையில் நாளை (ஜூன் 28) தவெக சார்பில் கல்வி விருதுகள் விழா நடைபெறவுள்ளது. அந்த விழாவில் நீண்ட நாட்களுக்குப் பிறகு விஜய் உரையாட இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:"ஜாம்பவான்கள் என்றென்றும் வாழ்கின்றனர்"- கல்கி படத்தில் மறைந்த ராமோஜி ராவுக்கு அஞ்சலி!