தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

உயிரை காப்பாற்றிக் கொள்ள உடைமைகளை இழந்த கிராம மக்கள்; மழை ஓய்ந்த பின்பும் இருளிலேயே மூழ்கியுள்ள இருவேல்பட்டு!

ஃபெஞ்சல் புயல் காரணமாக ஏற்பட்ட மழை மற்றும் வெள்ளப்பெருக்கில் மோசமான பாதிப்பை சந்தித்த கிராமங்களில் ஒன்றான விழுப்புரம் மாவட்டத்தின் இருவேல்பட்டு கிராமத்தின் தற்போதைய நிலையை விளக்குகிறது இந்த செய்தித் தொகுப்பு.

Iruvelpattu village in Viluppuram
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இருவேல்பட்டு கிராமம் (Credits - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : 18 hours ago

விழுப்புரம்: ஃபெஞ்சல் புயல் மற்றும் கனமழையின் விளைவாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் மிக மோசமான பாதிப்பை சந்தித்துள்ளது விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள பல்வேறு கிராமங்கள். புயல் காரணமாக பெய்த கனமழையினால் தமிழகத்தின் சில நீர்நிலைகள் நிரம்பின. அந்த வகையில் விழுப்புரம் மாவட்டம், சாத்தனூர் அணை நிரம்பியது. 'இதனால் அணையிலிருந்து தென்பெண்ணை ஆற்றில் நள்ளிரவில் உபரி நீர் திறக்கப்பட்டதால், ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு ஆற்றின் கரையோரம் உள்ள கிராமங்களில் வெள்ள நீர் சூழ்ந்தது.

அதிலும் குறிப்பாக, விழுப்புரம் மாவட்டம், இருவேல்பட்டு பகுதியில் வெள்ளநீர் புகுந்ததால், அப்பகுதியில் வசிக்கும் மக்கள் தங்களது உடைமைகளையும், ஆவணங்களையும் இழந்துள்ளனர். அத்தோடு பள்ளி மற்றும் கல்லூரிகளில் பயிலும் மாணவ, மாணவியர் தங்களது மதிப்பெண் பட்டியல் மற்றும் புத்தகங்களை இழந்துள்ளனர். மழை, வெள்ளத்துக்கு தாங்காமல் இப்பகுதியில் வீடுகளும் சில இடிந்து விழுந்துள்ளன. 5 நாட்கள் கடந்தும் அதிகாரிகள் யாரும் வந்து பார்வையிடவில்லை என கண்ணீர் மல்க குற்றம்சாட்டுகின்றனர் இருவேல்பட்டு கிராம மக்கள்.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இருவேல்பட்டு கிராம மக்களின் பேட்டி (Credits - ETV Bharat Tamil Nadu)

இதுகுறித்த கள நிலவரத்தை அறிந்துகொள்ள, நமது ஈடிவி பாரத் தமிழ்நாடு செய்தி குழு இருவேல்பட்டு கிராமத்திற்குள் நுழைந்தபோது, ஊர் முழுவதும் சேறும் சகதியுமாக காட்சி அளித்தன. வீடுகளில் துணி, அறைகலன்கள், சமையல் பாத்திரங்கள் என அனைத்தும் சேற்றுடன் சேறாக சிதறி கிடந்தன. கையில் கிடைத்த ஆவணங்கள் வெயிலில் காய வைக்கப்பட்டிருந்தன. மின் விநியோகம் சீரமைக்கப்படாததால் யாரையும் தொடர்பு கொள்ளக் கூட முடியாமல் உடுத்திருக்கும் ஆடையைத் தவிர வேறு ஏதும் இல்லாமல் பரிதவித்து நிர்க்கதியா்க இருப்பதாக பரிதாபம் தோய்ந்த முகத்துடன் கூறுகின்றனர் இருவேல்பட்டு கிராம மக்கள்.

வீட்டினுள் உள்ள சேற்றை அப்புறப்படுத்தும் பெண் (Credits - ETV Bharat Tamil Nadu)

இருவேல்பட்டு கிராமத்தைச் சேர்ந்த ராஜா என்பவர் கூறுகையில், "தென்பெண்ணை ஆற்றில் 1972 ஆம் ஆண்டிற்கு பின்னர் தற்போது தான் அதிக அளவு தண்ணீர் திறந்து விடப்பட்டு வெள்ளமாக வந்துள்ளது. எங்கள் உயிரை காப்பாற்றிக் கொள்வதற்காக உடைமைகளையும், கால்நடைகளையும் விட்டுவிட்டு தப்பி ஓடினோம். தற்போது அனைத்தும் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டுவிட்டது" என்று கவலை தெரிவித்தார்.

மண்ணோடு மண்ணாக புதைந்துள்ள வீடு (Credits - ETV Bharat Tamil Nadu)

ஏழாம் வகுப்பு பயிலும் மாணவி காவியா கூறும்போது, "மழையின்போது எனது புத்தகங்கள், சான்றிதழ்கள் அனைத்தும் வெள்ளத்தில் அடித்து சென்றுவிட்டது. நாங்கள் வசிக்கும் வீட்டின் சுவர்களும் தண்ணீரில் ஊறி இடிந்து விழும் நிலையில்தான் உள்ளன" என்று தழுதழுத்த குரலில் கூறியபடி கண்ணீர் சிந்தினார் மாணவி.

சேற்றினுள் மூழ்கிய பாத்திரங்களை தேடி எடுக்கும் பெண் (Credits - ETV Bharat Tamil Nadu)

இதேபோல தனது தந்தையை இழந்த நிலையில், தனது அண்ணன் சம்பாத்தியத்தில் தாயுடன் இருந்து பாலிடெக்னிக் படிக்கும் மாணவரான மதன் குமார் என்பவர் கூறுகையில், "நாங்கள் இருந்த வீட்டில் வேகமாக தண்ணீர் மட்டம் அதிகரித்ததால் எங்கள் உயிரை காப்பாற்றிக் கொள்வதற்காக உடைமைகளையும் சான்றிதழ்களையும் விட்டுவிட்டு பாதுகாப்பான இடத்துக்கு ஓடிவிட்டோம். தற்போது வெள்ளநீர் வற்றிய பிறகு வந்து பார்த்தபோது எங்களது வீடு இடிந்துவிட்டது. எனது புத்தகம், 10 மற்றும் 12ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ்கள் என அனைத்தும் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டுவிட்டது. இந்த நிலையில் இடிந்த வீட்டிற்கு அரசு ரூ.10,000 கொடுப்பதாக கூறியுள்ளது. தற்போது உள்ள விலைவாசியில் இந்த 10,000 ரூபாய் எப்படி பத்தும்? ஆகவே, இடிந்த வீட்டினை கட்டித் தர அரசு உதவ வேண்டும்" என கண்ணீர் மல்க கோரிக்கை வைத்தார் அவர்.

ABOUT THE AUTHOR

...view details