தேனி: இந்தியன் ரயில்வேயின் சுற்றுலா பிரிவான ஐஆர்சிடிசி (IRCTC) தென் மண்டலம் சார்பில் ஆன்மிக சுற்றுலா செல்லும் பயணிகளுக்காகப் புண்ணிய தீர்த்த யாத்திரை என்ற பெயரில் சிறப்பு ரயில் சேவை வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான 'பாரத் கௌரவ்' ஆன்மிக சுற்றுலா ரயில் சேவைக்கு தெற்கு ரயில்வே சார்பில் ஏற்பாடு செய்துள்ளது.
ஜூன் மாதம் 6 ஆம் தேதி திருநெல்வேலியில் இருந்து புறப்படும் இந்த ரயில் கோவில்பட்டி, விருதுநகர், மதுரை, திருச்சி, தஞ்சாவூர், கும்பகோணம், மயிலாடுதுறை, சிதம்பரம், சென்னை வழியாகக் காசி, வாரணாசி திரிவேணி சங்கமம், கயா, அயோத்தி ஆகிய புண்ணிய தலங்களுக்கு ஒன்பது நாட்கள் சுற்றுலா பயணமாகச் செல்ல உள்ளது.
இதற்கான பயணக் கட்டணம் ஒரு நபருக்கு 18 ஆயிரத்து 550 ரூபாய். 5-11 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு 17 ஆயிரத்து 560 ரூபாய் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. முழுவதும் படுக்கை வசதியுடன் கூடிய 11 பெட்டிகள் கொண்ட இந்த ரயிலில் 500 பேர் வரை பயணம் செய்யலாம். பயணிகளின் வசதிக்காகத் திருநெல்வேலியில் இருந்து சென்னை வரை மேற்குறிப்பிட்ட பத்து இடங்களில் இந்த ரயில் நின்று செல்லும் என்று ஐஆர்சிடிசி தென் மண்டல பொதுக்குழு மேலாளர் ராஜலிங்கம் வாசு கூறியுள்ளார்.