செய்தியாளர்களைச் சந்திப்பில் கே.வி.தங்கபாலு (video credit to ETV Bharat Tamil Nadu) திருநெல்வேலி: திருநெல்வேலி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் கடந்த 2ஆம் தேதி முதல் காணாமல் போனதாகக் கூறப்பட்ட நிலையில், திடீரென அவர் மர்மமான முறையில் உயிரிழந்தார். இதுகுறித்து திருநெல்வேலி மாவட்ட போலீசார் எட்டுத் தனிப்படைகள் அமைத்து விசாரித்து வருகின்றனர். தொடர்ந்து நான்கு நாட்களாக போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
இந்நிலையில் ஜெயக்குமார் எழுதிய இரண்டு கடிதங்களில் குறிப்பிடப்பட்டுள்ள 30க்கும் மேற்பட்ட நபர்களுக்கு போலீசார் சம்மன் வழங்கி, அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். அதன் அடிப்படையில் முன்னாள் காங்கிரஸ் கமிட்டி தலைவரான கே.வி.தங்கபாலுவுக்கு போலீசார் சமன் வழங்கினர்.
இதனையடுத்து திருநெல்வேலி வண்ணாரப்பேட்டையில் உள்ள தனியார் ஹோட்டலுக்கு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர் கே.வி.தங்கபாலு வந்தார்.
பின்னர் ஹோட்டலில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய கே.வி.தங்கபாலு, "நான் காங்கிரஸ் கமிட்டி மாநிலத் தலைவராக இருக்கும்போது நான் தான் ஜெயக்குமாருக்கு மாவட்டத் தலைவர் பொறுப்பு வழங்கினேன். இதை அவரே பல இடங்களில் கூறியிருக்கிறார்.
அவரிடம் பணம் வாங்கி தேர்தலுக்குச் செலவு செய்ய வேண்டிய சூழல் எனக்கோ காங்கிரஸ் கட்சிக்கோ இல்லை. போலீசார் அழைப்பை ஏற்று இன்று வந்திருக்கிறேன். போலீசாருக்கு முழு ஒத்துழைப்பு வழங்க நேரில் வந்திருக்கிறேன். போலீசாரைப் பொறுத்தவரை சிறப்பான முறையில் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். விசாரணை முடியும் வரை இந்த வழக்கில் அனைவரும் பொறுமையாக இருக்கத் தான் வேண்டும். விசாரணை முடிவில் உண்மை வெளிவரும்.
தேர்தலில் அதிகப் பணம் செலவிடப்பட்டுள்ளதாகக் கடிதத்தில் குறிப்பிட்டது தொடர்பான கேள்விக்கு, எதிர்க்கட்சியாக இருந்தால் விமர்சனம் செய்யத்தான் செய்வார்கள். தேர்தல் நேர்மையாக நடந்திருக்கிறது. தேர்தல் விதிமுறைகளை மீறவில்லை. உயிரிழந்த ஜெயக்குமார் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க:கடும் வறட்சி எதிரொலி: விலங்குகளை பாதுகாக்க தொட்டியில் தண்ணீர்.. குடித்து மகிழ்ந்த யானைகள் வீடியோ! - Sathyamangalam Forest