தஞ்சாவூர்: அனைத்து மக்களின் தாய்மொழி உரிமையைப் பாதுகாக்கும் வகையில், பிப்ரவரி 21ஆம் தேதியை ‘உலக தாய்மொழி தினமாக’ யுனெஸ்கோ (UNESCO) 1999ஆம் ஆண்டு அறிவித்தது. அதன்படி, 2000ஆம் ஆண்டிலிருந்து பிப்ரவரி 21ஆம் தேதி உலக தாய்மொழிகள் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
உலக தாய்மொழி தினத்தின் முக்கியத்துவத்தை, இன்றைய இளைய தலைமுறையினரும் எடுத்துரைக்கும் விதமாக, பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது. அந்த வகையில், தஞ்சாவூரில் குந்தவை நாச்சியார் அரசினர் மகளிர் கலைக்கல்லூரியில் உலக தாய்மொழி தினம் பிப்ரவரி 21ஆம் தேதி கொண்டாடப்பட்டது.
இதில், “தமிழுக்கு கை கொடுப்போம்” என்ற தலைப்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மெஹந்தி போட்டியில், 200க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவிகள் பங்கு பெற்று, தமிழின் சிறப்புகளை கலைத்திறனாக வெளிப்படுத்தினர். மேலும் அருந்தமிழ், அழகுத்தமிழ், தனித்தமிழ், மாத்தமிழ் உள்ளிட்ட தமிழின் சிறப்புகளை எடுத்துரைக்கும் திருவள்ளுவர், பாரதியார், ஸ்ரீவில்லிபுத்தூர் கோபுரம், ஏர் உழவன், காளை உள்ளிட்ட வடிவங்களை தங்கள் கரங்களில் மெஹந்தி கொண்டு வரைந்திருந்தனர்.