சென்னை: பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக போராடும் மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தைக் கண்டிப்பதாகக் கூறி, இந்திய மாணவர் சங்கம் சென்னை மாவட்டக்குழு சார்பாக, அமெரிக்க துணை தூதரகத்தை முற்றுகையிட்டு இன்று (செவ்வாய்க்கிழமை) போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பாலஸ்தீனத்தில் போர் நடைபெற்று வரும் நிலையில், பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக மாணவர்கள் போராட்டம் மேற்கொண்டுள்ளனர். அவ்வாறு ஆதரவு அளிக்கும் மாணவர்கள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியுள்ளது. இதனால், அமெரிக்கா நடத்தும் தாக்குதலை கண்டிக்கும் வகையில், இந்திய மாணவர் சங்கத்தினர் முற்றுகை போராட்டத்திற்கு அறிவிப்பு வெளியிட்டிருந்தனர்.
இந்த நிலையில், சென்னையில் உள்ள அமெரிக்க துணை தூதரகத்தைச் சுற்றியுள்ள பகுதிகள் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பது போடப்பட்டுள்ளது. இருப்பினும், ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரி சிக்னல் அருகே இந்திய மாணவர்கள் சங்கத்தினர் 30க்கும் மேற்பட்டோர் அமெரிக்காவிற்கு எதிராக பாதகைகளை ஏந்தியும், கோஷங்கள் எழுப்பியும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.