விழுப்புரம்:விக்கிரவாண்டி இடைத்தேர்தல் ஜூலை 10ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்காக வேட்புமனுத் தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் நேற்று காலை 10 மணிக்கு தொடங்கியது. சேலம், திருச்சி, தருமபுரி, கோவை மற்றும் நாமக்கல் பகுதியைச் சேர்ந்த ஐந்து வேட்பாளர்கள் இதுவரை வேட்புமனுத் தாக்கல் செய்துள்ளனர்.
குறிப்பாக, சேலம் பகுதியில் இருந்து பத்மராஜன் தனது தேர்தல் மனுவை தாக்கல் செய்துள்ளார். தேர்தல் மன்னன் என்று அழைக்கப்படும் இவர், இதுவரை 242 தேர்தல்களில் எம்.பி, எம்.எல்.ஏ மட்டுமல்லாமல் ஜனாதிபதி தேர்தலிலும் போட்டியிட்டு உள்ளதும் குறிப்பிடத்தக்கது.
தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்த அக்னி ஆழ்வார், அகில இந்திய ஊழல் தடுப்பு கூட்டமைப்பு சார்பாக 51வது முறையாக தேர்தலில் போட்டியிட தன்னுடைய கழுத்தில் 50 ஆயிரம் ரூபாய் ரொக்க மாலையுடன், பத்தாயிரம் ரூபாய்க்கான சில்லறைக் காசுகளுடன் தன்னுடைய வேட்புமனுவைத் தாக்கல் செய்துள்ளார். கோவை மாவட்டத்தைச் சேர்ந்த நூர் முகமது 44வது முறையாக தேர்தலில் போட்டியிட வேட்புமனுத் தாக்கல் செய்துள்ளார்.