சென்னை: கேரளா மற்றும் கர்நாடகா மாநிலங்களின் ஒருங்கிணைப்புடன் நடைபெற்ற தமிழ்நாடு வனத்துறையின் 2வது ஒருங்கிணைந்த கழுகுகள் கணக்கெடுப்பின்படி, தமிழ்நாட்டில் கழுகுகள் எண்ணிக்கை சமீபமாக அதிகரித்து வருவதை அறிய முடிகிறது.
மேலும் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 25 மற்றும் 26ம் தேதிகளில் நடத்தப்பட்ட முதல் ஒருங்கிணைந்த கழுகுகள் கணக்கெடுப்பு மூலம் கழுகுகளின் மொத்த எண்ணிக்கை 246 என மதிப்பிடப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, டிசம்பர் 30 மற்றும் 31ம் தேதிகளில் 2ஆம் முறையாக இரண்டாவது ஒருங்கிணைந்த கழுகுகள் கணக்கெடுப்பு எடுக்கப்பட்டது.
இந்த கணக்கெடுப்பு முடிவில் 320 ஆக அதிகரித்துள்ளது தெரியவந்துள்ளது. அதாவது, முதுமலை புலிகள் காப்பகம், சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், பந்திபூர் புலிகள் காப்பகம், பில்லிகிரி ரங்கநாதா சுவாமி கோயில் புலிகள் காப்பகம், நாகர் ஹோல் புலிகள் காப்பகம், வயநாடு வன உயிரின சரணாலயம், நல்லை வனப் பகுதி என ஆகிய இடங்களில், கணக்கெடுப்பு எடுக்கப்பட்டுள்ளது. இதில் 320 கழுகுகள் இருப்பதாகத் தெரிய வந்துள்ளது.
மேலும், இந்த இடங்களில் வெண்ணிறக் கழுகு, நீண்ட பில்ட் கழுகு, சிவப்பு தலை கழுகு, எகிப்தியன் கழுகு, இமாலயன் கழுகு என 5 வகை கழுகுகள் உள்ளன. இதில் வெண்ணிறக் கழுகுகள் மட்டுமே 139 கழுகுகள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கழுகுகளின் எண்ணிக்கை: முதுமலை புலிகள் காப்பகத்தில், 63 வெண்ணிறக் கழுகுகளும், 9 நீண்ட பில்ட் கழுகுகளும், 6 சிவப்பு தலை கழுகுகளும் உள்ளன. சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில், 35 வெண்ணிறக் கழுகுகளும், 25 நீண்ட பில்ட் கழுகுகளும், 10 சிவப்பு தலை கழுகுகளும் உள்ளன. பந்திபூர் புலிகள் காப்பகத்தில், 57 வெண்ணிறக் கழுகுகளும், 3 நீண்ட பில்ட் கழுகுகளும், 5 சிவப்பு தலை கழுகுகளும் உள்ளன. பில்லிகிரி ரங்கநாதா சுவாமி கோயில் புலிகள் காப்பகத்தில், 5 வெண்ணிறக் கழுகுகளும், 7 நீண்ட பில்ட் கழுகுகளும், 2 சிவப்பு தலை கழுகுகளும் உள்ளன.