சென்னை: இந்தியாவின் பழமையான பல்கலைக்கழகமாகவும், தமிழ்நாட்டில் உள்ள பல்கலைக்கழகங்களுக்குத் தாய் பல்கலைக்கழகமாகவும் விளங்கி வரும் சென்னை பல்கலைக்கழகம் நிதி நெருக்கடியில் சிக்கித் தவித்து வந்தது. அதிலிருந்து சமாளித்துக் கொள்வதற்குத் தொலைதூர கல்வி நிறுவனத்தின் மூலம் ஆசிரியர்களுக்கு ஊதியத்தை வழங்கி வந்தது. தமிழ்நாடு அரசிடம் தொடர்ந்து நிதி நிலையைச் சரி செய்வதற்கு உதவி செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், சென்னை பல்கலைக்கழகத்தின் தொலைதூர கல்வி நிறுவனத்தின் வங்கிக் கணக்கு உட்படப் பாரத ஸ்டேட் வங்கியில் உள்ள 37 கணக்குகளை வருமானவரித்துறை முடக்கி உள்ளது. சென்னை பல்கலைக் கழகம் சுமார் 424 கோடி ரூபாய் வருமானவரி செலுத்தவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர்களுக்கும், ஊழியர்களுக்கும் ஊதியம் வழங்கமுடியாத நிலைமை ஏற்பட்டுள்ளன.
உயர் கல்வித்துறை செயலாளர் தலைமையிலான நிர்வாகக் குழு வழிகாட்டுதல் அடிப்படையில் செயல்பட்டு வருகிறது. சென்னை பல்கலைக்கழகம் வருமானவரித்துறைக்கு 424 கோடியே 67 லட்சம் நிலுவைத் தொகை செலுத்தப்படாமல் உள்ளது. கடந்த 2017-2018 நிதி ஆண்டு முதல் 2020 - 2021 நிதி ஆண்டு வரையிலான காலகட்டத்தில் செலுத்த வேண்டிய நிலுவைத் தொகையைச் செலுத்துவதற்கு அவகாசம் வழங்கிய போதும், அதனைச் செலுத்தாமலும், உரிய வகையில் விளக்கத்தை அளிக்காமலிருந்துள்ளதும் தெரியவந்துள்ளது. பணியாளர்கள் சம்பளம், பல்கலைக்கழகத்தின் மின் கட்டணம், பராமரிப்பு செலவுக்கும் வங்கிக் கணக்கு தேவையாக இருக்கிறது.
இது குறித்து உயர் கல்வித்துறை அதிகாரி கூறும்போது, “வரி கட்டாததும், காலதாமதம் ஆனதும் உண்மைதான். இதனால் வங்கிக் கணக்கை முடக்கியுள்ளனர். வங்கிக் கணக்குகளை மீண்டும் பயன்படுத்த அனுமதி கடிதம் கொடுத்துள்ளோம். இந்த விவகாரத்தைப் பொறுத்தவரை மாணவர்களின் நலம் எந்த விதத்திலும் பாதிக்கப்படாமல் நடவடிக்கை எடுக்கப்படும்” என்றனர்.
பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தின் மாநிலத் தலைவர் காந்தி ராஜ் கூறும்போது, “இந்தியாவின் முதன்மைப் பல்கலைக்கழகமாகவும், தாய் பல்கலைக்கழகமாக உள்ள சென்னை பல்கலைக்கழகத்தில் துணைவேந்தர் இல்லாத சூழ்நிலையில் மிகவும் சிரமமாகச் செயல்பட்டு வருகிறது. அதனையும் தாண்டி அனைத்து வங்கிக் கணக்குகளும் மூடப்பட்டு உள்ளதாக வரும் தகவல் கல்வியாளர்களிடம் மிகுந்த அதிர்ச்சியை அளிக்கிறது.
சென்னை பல்கலைக்கழகத்தின் நிர்வாகம் கொள்கை முடிவு எடுக்க முடியாத நிலையில், கன்வீனர் கமிட்டி மூலம் நிர்வகிக்கப்படுகிறது. நிதி நிலையிலும் முடக்கப்பட்டுள்ளது என்பது அதனுடைய வேலைப்பாடுகள் எவ்வாறு நடக்கும் என்ற அச்சத்தையும் ஏற்படுத்துகிறது. எனவே அரசு உடனடியாக தலையிட்டு இதன் கணக்கு வழக்குகளை அளித்து சென்னை பல்கலைக்கழகம் சுமுகமாகச் செயல்படுவதற்கான அனைத்து வேலைகளையும் செய்ய வேண்டும்.