நீலகிரி:கேரளாவில் இருந்து நீலகிரிக்கு இடம்பெயர்ந்து வரும் காட்டு யானைக் கூட்டம் பந்தலூர் அருகே எலியாஸ் கடை பகுதியில் முகாமிட்டுள்ளன. இவற்றை கண்காணிக்கும் பணியில் வனத்துறையினர் மற்றும் யானை விரட்டும் குழுவினர் ஈடுபட்டுள்ளனர்.
தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா மூன்று மாநிலங்களை ஒன்றிணைக்கும் மாவட்டமாக நீலகிரி மாவட்டம் பந்தலூர் பகுதி அமைந்துள்ளது. கடந்த இரண்டு மாத காலமாக தொடர்ந்து பெய்த மழையால் தற்போது பந்தலூர் மற்றும் முதுமலை புலிகள் காப்பகம் சுற்றி உள்ள வனப்பகுதிகள் தேயிலைத் தோட்டங்கள் பச்சை பசேலென காட்சியளிக்கிறது.
இதனால் கேரளாவில் இருந்து தற்போது காட்டு யானைகள் குட்டிகளுடன் கூட்டம் கூட்டமாக இடம்பெயர்ந்து நீலகிரி மாவட்டம் பந்தலூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிக்கு இடம்பெயர்ந்து வர துவங்கியுள்ளது. கடந்த ஒரு வாரமாக சேரங்கோடு மலைகளில் முகாமிட்டுள்ள இந்த காட்டு யானை கூட்டம் தற்போது எலியாஸ் கடை, சேரம்பாடி போன்ற பகுதிகளை உலா வருகிறது.