சென்னை:சென்னை பாரிமுனையில் உள்ள ராஜா அண்ணாமலை மன்றத்தில் கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழாவையொட்டி, சென்னை கிழக்கு மாவட்ட திமுக சார்பில், 'காலம் உள்ளவரை கலைஞர்' எனும் பேரில் கண்காட்சியை, நடிகர் பிரகாஷ்ராஜ் இன்று (ஜூன் 1) தொடங்கி வைத்தார். இதில் கலைஞரின் நூற்று நாற்பது படங்கள் இடம் பெற்றுள்ளது. கருணாநிதியை நேரில் பார்ப்பதைப் போல் ஹாலோகிராம் அமைப்பு இரண்டு இடங்களில் உருவாக்கப்பட்டுள்ளது. இக்கண்காட்சி ஜூன் 7ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.
நடிகர் பிரகாஷ் ராஜ் பேட்டி (Credits - ETV Bharat Tamil Nadu) இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் பிரகாஷ்ராஜ், “பேச்சு வரவில்லை. மனது 30 ஆண்டுகள் பின்னோக்கிச் செல்கிறது. 30 ஆண்டுகளுக்கு முன்பு தமிழ்நாட்டிற்கு வந்த போது இருந்த கலைஞர் ஞாபகத்திற்கு வருகிறார். கலைஞருடன் இருப்பது போலவே ஒரு உணர்ச்சி ஏற்படுகிறது, அதை இன்றைய தொழில்நுட்பம் செய்துள்ளது.
கலைஞரின் வாழ்க்கையின் பயணத்தை என்னால் உணர முடிந்தது, இப்படிப்பட்ட மனிதரை கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகள் உடனிருந்து ஸ்டடி செய்ததுதான் அதற்கு காரணம். சமீபத்தில் ஒரு பேட்டியில் 'நீங்கள் சாதி அரசியல் பற்றி அதிகம் பேசுகிறீர்கள்' என கூறினார்கள், கலைஞர் இருந்திருந்தால் இப்படி பேச வேண்டிய அவசியம் வந்து இருக்காது என நான் கூறினேன். கலைஞர் இருக்கும் வரை எவரும் இங்கு வாலாட்ட முடியவில்லை.
இதையும் படிங்க: "தென்மாவட்டங்ளில் தொடரும் சாதியக் கொலைகள்".. மாரி செல்வராஜ் கூறிய பதில் என்ன? - Director Mari Selvaraj
கலைஞருடன் நிறைய அனுபவங்கள் உள்ளது எனக்கு. கலைஞருக்குப் பிறகு முதல்வர் ஸ்டாலின் கலைஞரின் கொள்கைகளையும், சிந்தனைகளைையும் உயிர்ப்போடு வைத்திருக்கிறார். இந்தியாவில் நம்பர் 1 மாநிலமாக தமிழ்நாடு உள்ளது, இன்னும் முன்னேறும். கலைஞரின் விதை தமிழ்நாட்டின் மக்களுக்குள் உள்ளது, அதனால் தான் இந்த மண் அழகாக உள்ளது, ஒரு போராளியின் நிலமாக உள்ளது.
நிறைய சூட்டிங் பார்க்க மக்கள் வருவார்கள், ஆனால் கன்னியாகுமரி சூட்டிங்கிற்கு அவரே ஆடியன்ஸைக் கூட்டிச் செல்கிறார். தற்போதைய காலகட்டத்திற்கு கலைஞர் ஒருவரே போதும், அவரால் எத்தனை பேர் உயர்த்தப்பட்டார்கள் என்பதைத்தான் பார்க்க வேண்டும், அந்த கணக்கில் தான் நாம் கலைஞரை பார்க்க வேண்டும்.
தேர்தல் முடிவு எப்படி இருக்கும் என நினைக்கிறீர்கள் என்ற கேள்விக்கு பதில் அளித்த அவர், “தமிழகத்தில் இருந்து அனுப்பியாச்சி. நாடு முழுவதிலும் அனுப்பி விடுவார்கள் என நம்புகிறேன், தோல்விக்கான அனைத்து வேலையும் மோடி செய்து விட்டார். முதலமைச்சர் ஸ்டாலின் தமிழ்நாட்டிற்கு நிறைய விஷயங்களைச் செய்து வருகிறார்.
வளர்ச்சி தெரிகிறது, யாரையும் எதிர்த்து பேச வேண்டிய துணிச்சல் இருக்கிறது, அது தான் தமிழ்நாட்டின் குரல், அடையாளம், ஒரு முதல்வரே அப்படி நிற்கும் போது மக்களுக்கு நம்பிக்கை வருகிறது, ஸ்டாலின் சாரின் ஆட்சியை நான் பாராட்டுகிறேன், எனக்கு தமிழ்நாட்டில் வீடு உள்ளது என்று நம்பிக்கை வருகிறது” என பேசியிருந்தார். இந்நிகழ்வின்போது அமைச்சர் சேகர்பாபு, பாடலாசிரியர் பா.விஜய், மேயர் பிரியா ராஜன் ஆகியோர் உடன் இருந்தனர்.
இதையும் படிங்க: கன்னியாகுமரியில் மோடி தியானம்: குவிந்த புகார்கள் மீது நடவடிக்கை எடுக்ககாது ஏன்? - PM Modi Meditates