சென்னை:சென்னையில் இருந்து எத்தியோப்பியா நாட்டின் தலைநகர் அடிஸ் அபாபா செல்லும் எத்தியோப்பியன் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் இன்று (நவம்பர்.26) அதிகாலை சென்னை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து புறப்பட தயாராகிக் கொண்டு இருந்தது.
இதற்கிடையே, அந்த விமானத்தில் பயணம் செய்ய வந்த பயணிகளின் உடைமைகளையும், பயணிகளையும் பாதுகாப்பு அதிகாரிகள் பரிசோதித்து கொண்டு இருந்தனர். அப்போது ஆந்திர மாநிலத்தை சேர்ந்த ராமச்சந்திரா (35) என்பவர் இந்த விமானத்தில் எத்தியோப்பியா நாட்டிற்கு செல்வதற்காக வந்து இருந்தார்.
அவருடைய கைப்பையை பாதுகாப்பு அதிகாரிகள் ஸ்கேன் மூலம் பரிசோதித்த போது எச்சரிக்கை மணி ஒலித்தது. இதையடுத்து பாதுகாப்பு அதிகாரிகள் அவருடைய கைப்பையை திறந்து பார்த்து சோதனை செய்தனர். அப்போது அந்த பையில் ஜிபிஎஸ் கருவி ஒன்று இருப்பதை கண்டுப்பிடித்தனர்.
இதையடுத்து, ராமச்சந்திராவை விமானத்துக்கு அனுப்பாமல் நிறுத்தி வைத்து விசாரணை நடத்தினர். அப்போது ராமச்சந்திரா தான் புவியியல் துறையில் பணியாற்றுவதாகவும், தனது பணி நிமித்தமாக இந்த கருவியை எடுத்து செல்வதாகவும் கூறினார்.
இதையும் படிங்க:அரியவகை நோயால் பாதிக்கப்பட்ட சிறுவன்... 111 நாள் தீவிர சிகிச்சையில் சிறுவனை மீட்ட தேனி அரசு மருத்துவர்கள் குழு!
ஆனால் பாதுகாப்பு அதிகாரிகள் அவருடைய விளக்கத்தை ஏற்றுக் கொள்ளவில்லை. விமான பாதுகாப்புச் சட்டத்தின் படி ஜிபிஎஸ் கருவியை விமானத்தில் எடுத்து செல்லக்கூடாது என்று கூறி அந்த கருவியை பறிமுதல் செய்தனர். மேலும் ராமச்சந்திரா விமான பயணத்தையும் ரத்து செய்தனர்.
அதன் பின்பு பாதுகாப்பு அதிகாரிகள் பயணி ராமச்சந்திராவையும் அவரிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட ஜிபிஎஸ் கருவியையும் சென்னை விமான நிலைய காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். விமான நிலைய போலீசார் ராமச்சந்திராவிடம் தொடர்ந்து விசாரணை நடத்தினர்.
மேலும் ஜிபிஎஸ் கருவி விமானத்தில் எடுத்துச் செல்லக்கூடாது என்ற சட்ட விதி இருப்பதால் அந்தக் கருவியை உறவினரிடம் கொடுத்துவிட்டு வேறு விமானம் மூலம் செல்லலாம் என போலீசார் அறிவுறுத்தினர். மேலும் விதிகளை மீறி ஜிபிஎஸ் கருவியை விமானத்தில் எடுத்து செல்ல முற்பட்டதால் இது குறித்த தகவலையும் ராமச்சந்திராவிடம் இருந்து எழுதி வாங்கிவிட்டு போலீசார் அனுப்பியதும் குறிப்பிடத்தக்கது.
ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits- ETV Bharat Tamil Nadu) ஈடிவி பாரத் வாட்ஸ்அப் சேனலில் இணையஇங்கே கிளிக் செய்யவும்