சென்னை: சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் கடந்த இரண்டு நாட்களாக இரவு நேரத்தில் விட்டுவிட்டு மிதமான மழை பெய்து வந்தது. அதேநேரம், நேற்று காலை முதல் வெயிலின் தாக்கம் இருந்த நிலையில், மாலை நேரத்தில் கருமேகங்கள் சூழ்ந்து சென்னை புறநகர் பகுதிகளான தாம்பரம், பெருங்களத்தூர், வண்டலூர், குரோம்பேட்டை, பல்லாவரம், சேலையூர், சிட்லப்பாக்கம், முடிச்சூர், மணிமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக மிதமான மழை பெய்தது.
இதனால் ஜிஎஸ்டி சாலையில் தாழ்வான பகுதிகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. இதன் காரணமாக, வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகினர். மேலும், சில இடங்களில் வாகன நெரிசல் ஏற்பட்டு, மழையில் நடந்தபடியே வாகன ஓட்டிகள் சென்றனர். அது மட்டுமல்லாமல், கடந்த மூன்று நாட்களாக மாலை நேரத்தில் மழை பெய்து வருவதால் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் குளிர்ந்த சூழ்நிலை உருவாகியுள்ளது.
இந்த நிலையில், இன்றும் (செப்.26) காலை முதல் சென்னையின் பல்வேறு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்து வருகிறது. மேலும், அம்பத்தூர் மற்றும் வானகரத்தில் 13 சென்டிமீட்டர், மலர் காலணியில் 12 சென்டிமீட்டர் என்ற அளவில் மிக கன மழை பெய்துள்ளது. அதேபோல், மணலி மற்றும் அம்பத்தூரில் 10 செ.மீ. மழையும், கே.கே.நகர், அண்ணா நகர், கத்திவாக்கத்தில் 9 செ.மீ. மழையும், கொளத்தூர், கோடம்பாக்கம், புழலில் 8 செ.மீ. மழையும் பதிவாகியுள்ளது.
மேலும், ராயபுரம், திருவொற்றியூர், பனப்பாக்கம், ஐஸ் ஹவுஸ், மாதவரம், ஆலந்தூர் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தில் 7 செ.மீ. மழையும் பெய்துள்ளது. அதுமட்டுமல்லாமல், மதுரவாயல் மற்றும் சோழிங்கநல்லூரில் 6 சென்டிமீட்டர் என்ற அளவில் கன மழை பெய்துள்ளது. இதேபோல் நுங்கம்பாக்கம் மற்றும் மீனம்பாக்கத்தில் தலா 7 சென்டிமீட்டர் என்று அளவில் கனமழை பெய்துள்ளது.
இந்த நிலையில், சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் இரவு 9 மணிக்கு மேல் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்தது. இதன் காரணமாக, விமான சேவைகள் பெருமளவு பாதிக்கப்பட்டன. இதன்படி, நேற்று இரவு பெங்களூர், மும்பை, விஜயவாடா, புவனேஸ்வர், கோழிக்கோடு, திருச்சி, திருவனந்தபுரம், கோலாலம்பூர் உட்பட 13 விமானங்கள் சென்னையில் தரையிறங்க முடியாமல், நீண்ட நேரமாக வானில் வட்டமடித்து பறந்தன.