சென்னை: மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக தமிழ்நாட்டில் அடுத்த 5 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இந்த நிலையில், நேற்று இரவு முழுவதும் சென்னை நகரின் பல்வேறு பகுதிகளில் பரவலாக கனமழை பெய்தது. குறிப்பாக கீழ்ப்பாக்கம், ஆவடி, சேத்துப்பட்டு, நுங்கம்பாக்கம், கோடம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் சூறைக்காற்றுடன் கூடிய கனமழை பெய்ததால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியது.
அதேபோல் சென்னையின் புறநகர்ப் பகுதிகளான தாம்பரம், பெருங்களத்தூர் உள்ளிட்ட பகுதிகளிலும் கனமழை கொட்டித் தீர்த்தது.தென்சென்னை, ஈ.சி.ஆர், ஓ.எம்.ஆர் உள்ளிட்ட பகுதிகளில் பெய்த கனமழையால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால், மக்கள் கடும் அவதிக்கு உள்ளாகினர். மேலும், சென்னை விமான நிலையத்தில் 7 வருகை விமானங்கள், 12 புறப்பாடு விமானங்கள் என மொத்தம் 19 விமானங்களின் சேவை பாதிக்கப்பட்டது.