சென்னை:திருவள்ளூர் மாவட்டத்தில் அரசு புறம்போக்கு நிலங்கள், கொசஸ்தலை ஆற்றுப் படுகைகளில் சட்டவிரோதமாக மணல், சவுடு மண் அள்ளுவதை தடுக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர், அரசுத்துறை அதிகாரிகளுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கொசஸ்தலை ஆறு மற்றும் கனிமவள பாதுகாப்பு சங்கம் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்த மனுவில்,"திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள மெய்யூர், வேம்பேடு, ராஜபாளையம், சோமதேவன்பட்டு மற்றும் எறையூர் கிராமங்களில் அரசு புறம்போக்கு நிலங்களிலும், கொசஸ்தலை ஆற்றுப் படுகையிலும் சட்டவிரோதமாக மணல் மற்றும் சவுடு மண் அள்ளுவதற்கு எதிராக சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க உத்தரவிடவேண்டும்,"என கோரிக்கை விடப்பட்டது.
இந்த வழக்கு,நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம் மற்றும் வி.லட்சுமி நாராயணன் அமர்வில் விசாரணைக்கு வந்த போது, "அதிகாரிகள் துணையுடன், கொசஸ்தலை ஆற்றுப் படுகையில் உள்ள அரசு புறம்போக்கு நிலங்களில் அதிகளவு மணல், சவுடு மண் அள்ளப்படுவதாகவும், இதை தடுக்க வருவாய் துறை, காவல் துறை உள்ளிட்ட அரசுத்துறை அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை,"என மனுதாரர் தரப்பில் வாதங்கள் முன் வைக்கப்பட்டன.