சென்னை:சென்னை ஐஐடியில் சேரும் மாணவர்களுக்கு பல்வேறு வகையான கல்வி உதவித்தொகை வழங்கப்படுவதுடன், பெற்றோரின் ஆண்டு வருமானம் 5 லட்சத்திற்கும் குறைவாக இருந்தால், கல்விக் கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது என அதன் இயக்குனர் காமகோடி தெரிவித்துள்ளார்.
சென்னை ஐஐடி முன்னாள் மாணவர்கள் மற்றும் சமூகப் பொறுப்புணர்வு நிதி கூட்டாளர்கள் இணைந்து, பெற்றோரின் ஆண்டு வருமானம் ரூ.1 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரை உள்ள பிடெக் மாணவர்களுக்கு, கடந்த ஆண்டு (2022-2023) 100 சதவீத நிதியுதவியை வழங்கினர். அதேபோல், இந்த ஆண்டும் (2023-2024) நிதியுதவி வழங்கப்பட உள்ளது.
சென்னை ஐஐடி மத்திய-மாநில அரசுகள் மாணவர்களுக்காக அளித்துவரும் நிதியுதவி மற்றும் கல்வி உதவித்தொகை ஆதரவுகளில் ஒன்று 'மெரிட்-கம்-மீன்ஸ்' (MCM) உதவித் தொகை. எஸ்சி, எஸ்டி மாணவர்கள் எந்த பாடத்திட்டத்தில் சேர்ந்திருந்தாலும், அவர்களது பெற்றோரின் வருமானத்தை கணக்கில் கொள்ளாமல் கல்விக் கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
இந்தப் பிரிவின் கீழ், இந்திய அரசு அளித்து வரும் மூன்றில் இரு பங்கு கல்விக் கட்டண தள்ளுபடியுடன், எம்சிஎம் கல்வி உதவித் தொகையும் சேர்த்து வழங்கப்படுவதால், பொருளாதாரத்தில் நலிந்த பிரிவினர், பொதுப்பிரிவினர், இதர பிற்படுத்தப்பட்டோர் ஆகிய பிரிவுகளைச் சேர்ந்த தகுதியுள்ள பிடெக், இரட்டைப் பட்ட மாணவர்கள் (டபுள் டிகிரி) கல்விக் கட்டணம் செலுத்துவதில் முழு விலக்கு பெறுவர் என கூறப்பட்டுள்ளது. இந்த ஆதரவின் மூலம், மாணவர்கள் தங்களின் பண பிரச்னை, கல்விக் கடன்கள் பற்றிய கவலையின்றி, படிப்பிலும், எதிர்காலக் கல்வியைத் தொடர்வதிலும் முழுமையாக கவனம் செலுத்த முடியும்.
இது குறித்து சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி கூறுகையில், “தேவையுள்ள மாணவர்களுக்கு நிதியுதவி கிடைப்பதற்கு இயன்ற வரை நாங்கள் முயற்சி செய்து வருகிறோம். இந்த கல்வி உதவித் தொகைத் திட்டத்தின் கீழ், 2022-2023ஆம் ஆண்டில் 490 மாணவர்களுக்கு 3.26 கோடி ரூபாய் வழங்கப்பட்ட நிலையில், நடப்பு நிதியாண்டான 2023-2024இல் 495 மாணவர்களுக்கு 3.30 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. கல்வி உதவித் தொகையான 66 ஆயிரத்து 667 ரூபாய் இரண்டாகப் பிரிக்கப்பட்டு, கல்வியாண்டின் இரு செமஸ்டர்களுக்கும் வழங்கப்படுகிறது” என கூறினார்.
தொடர்ந்து இது குறித்து சென்னை ஐஐடி டீன் (முன்னாள் மாணவர்கள் மற்றும் கார்ப்பரேட் உறவுகள்) பேராசிரியர் மகேஷ் பஞ்சக்னுலா பேசுகையில், “நிதித் தேவையுள்ள மாணவர்களுக்கு எந்த மறுப்பும் இன்றி தொடர்ச்சியாக இரண்டு ஆண்டுகளுக்கு முழு கல்வித்தொகை வழங்கப்பட்டது” என கூறினார்.
இந்த கல்வி உதவித்தொகையால் பயனடைந்த மாணவர்கள் கூறும்போது, “எனது குடும்பத்தில் முறையாக பொறியியல் பட்டம் பெற்ற முதலாவது நபர் நான்தான் என்பதால் என் குடும்பம் பெருமையடைந்துள்ளது. எனது குடும்பத்திற்கு எந்தவித சுமையையும் ஏற்படுத்தாமல் கல்விக் கட்டணம், விடுதிக் கட்டணம் ஆகியவற்றைச் செலுத்த ஐஐடிஎம்-இன் கல்வி உதவித் தொகைகள் உதவுகின்றன” என கூறினர்.
இது குறித்து ஐஐடி மாணவி சாய்ஸ்ரீ கூறும்போது, “சென்னை ஐஐடியில் என்னை சேர்த்தே ஆக வேண்டும் என்ற என் தந்தையின் கனவை நிறைவேற்ற முடிந்திருக்கிறது. நான் பிறப்பதற்கு முன்பே அவர் இங்கு பணிபுரிந்து வந்தார். தினக்கூலியாக வேலை செய்தபோது, சென்னை ஐஐடியைச் சுற்றிப் பார்த்த அவர், இது மிகவும் மதிப்பு வாய்ந்த கல்வி நிறுவனம் என்பதை புரிந்துகொண்டார். எனவே, என்னை இங்கே படிக்க வைப்பது அவரது கனவாக இருந்தது. அந்தக் கனவுதான் உண்மையிலேயே சென்னை ஐஐடியில் நுழைவதற்கும் காரணமாக அமைந்தது.