திருநெல்வேலி:ஜெயக்குமார் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டு 10 நாட்கள் ஆன நிலையில், தென் மண்டல ஐஜி கண்ணன் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலக வளாகத்தில் நடைபெற்று வருகிறது. இதில், நெல்லை சரக டிஐஜி, காவல்துறை கண்காணிப்பாளர் உள்ளிட்ட முக்கிய காவல்துறை அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர்.
ஜெயக்குமார் மரணம் தற்கொலையா? கொலையா? என்ற மர்மம் இன்று வரை நீடித்து வருகிறது. இதுவரை கிடைக்கப்பெற்ற ஆவணங்கள் விசாரிக்கப்பட்ட சாட்சிகளின் வாக்குமூலங்கள் அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து ஆலோசனை நடைபெறுகிறது. ஜெயக்குமாரின் பிரேதப் பரிசோதனை அறிக்கை மற்றும் எலும்புகள் ஆய்வக சோதனைக்கு அனுப்பப்பட்டுள்ள நிலையில் அதன் முடிவுகள் விரைவில் வெளியாக உள்ளது.
முன்னதாக, ஜெயக்குமார் மரண வழக்கில் கடிதங்கள் உட்பட சில முக்கிய ஆதாரங்கள் கிடைத்தும்கூட ஜெயகுமாருக்கு என்ன நடந்திருக்கும் என்பது தெரியாமல் இருந்து வருகிறது. அந்த கடிதங்களில், தனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாகச் சொல்லி காங்கிரசின் முக்கிய நிர்வாகிகளின் பெயர்களையும் அவர் குறிப்பிடப்பட்டிருந்ததாகக் கூறப்பட்டது. எனினும் இவ்வழக்கை போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக, நெல்லை எஸ்பி சிலம்பரசனே ஜெயக்குமார் வீட்டுப் பகுதியில் முகாமிட்டு ஜெயக்குமாரின் மனைவி, இரு மகன்கள், மகள், மருமகன் என குடும்பத்தினர் அனைவரிடமும் விசாரணை நடத்தினார். ஆனாலும், ஜெயக்குமார் மரணத்தின் பின்னணியில் உள்ள மர்மம் இன்னும் விலகவில்லை. தொடர்ந்து, தொழில் விவகாரம், அரசியல் விவகாரம், பெண் விவகாரம் என பல கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தியும் பலனளிக்கவில்லை.
மேலும், ஜெயக்குமார் உடல்தானா என்பதை உறுதி செய்ய டிஎன்ஏ சோதனையும் செய்யப்பட்டது. இதற்காக ஜெயக்குமார் மகனின் ரத்த மாதிரி சேகரிக்கப்பட்டு, ஜெயக்குமார் உடல் எலும்புகள் ஆய்வுக்குக் கொண்டு செல்லப்பட்டன.
இந்த நிலையில், ஜெயக்குமார் வழக்கில் உடற்கூறாய்வு வல்லுநர் குழு அறிக்கை, தடய அறிவியல் துறையின் சிறப்புக் குழு அறிக்கை உள்ளிட்ட அனைத்து அறிக்கைகளின் முடிவுகளும் தற்போது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிலம்பரசனிடம் வழங்கப்பட்டு விட்டதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், தென் மண்டல ஐஜி கண்ணன் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலக வளாகத்தில் நடைபெற்று வருகிறது.
இதையும் படிங்க:"கோவை மத்திய சிறை தான் உனக்கு சமாதி" என சிறைக் காவலர் மிரட்டல்? - சவுக்கு சங்கர் பகீர் குற்றச்சாட்டு - Savukku Shankar