திருப்பூர்: மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையமான யுபிஎஸ்சி (UPSC) சார்பில், ஆண்டுதோறும் குடிமைப் பணிகளுக்கான தேர்வுகள் நடத்தப்பட்டு, ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎப்எஸ் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் உள்ள காலிப் பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. இந்நிலையில், 2023ஆம் ஆண்டு நடைபெற்ற குடிமைப் பணிகளுக்கான தேர்வு முடிவுகள் நேற்று வெளியானது.
அதில், பொதுப் பிரிவில் 347 பேரும், பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள் பிரிவில் 115 பேரும், ஓபிசி பிரிவில் 303 பேரும், பட்டியல் வகுப்பில் 165 பேரும் மற்றும் பழங்குடியினர் பிரிவில் 86 பேர் என மொத்தம் ஆயிரத்து 16 பேர் வெற்றி பெற்றுள்ளனர். அதில் தமிழ்நாட்டைச் சேர்ந்த மாணவர் ஒருவர் தேசிய அளவில் 41வது இடத்தைப் பெற்றிருந்தார்.
அதேபோல், திருப்பூர் இடுவம்பாளைம் பகுதியைச் சேர்ந்த தாரணி என்பவர், தேசிய அளவில் 250வது இடத்தைப் பெற்று வெற்றி பெற்றுள்ளார். பல் மருத்துவப் படிப்பு முடித்த தாரணி, ஆறு மாதங்கள் மருத்துவப் பணிகளுக்கு பிறகு, 4 ஆண்டுகளாக யுபிஎஸ்சி தேர்வுக்காக தயாராகி வந்துள்ளார். மூன்று முறை போட்டியிட்டு தோல்வியைச் சந்தித்த பிறகு தான், தற்போது நான்காவது முறையாக கடும் முயற்சிக்குப் பின்னர் ஐஏஎஸ் தேர்வில் வெற்றி பெற்றுள்ளார்.
இது குறித்து தாரணி கூறுகையில், "ஐஏஎஸ் படிப்பு மீது எனக்கு எப்போதும் ஆசை இருந்தது உண்டு. மக்கள் சேவை செய்ய வேண்டும் என்பதற்காகத்தான் மருத்துவப் படிப்பையே தேர்வு செய்தேன். மக்கள் சேவை ஆற்ற வேண்டும் என்கிற ஆர்வம் என்னுடைய தாயிடம் இருந்து எனக்கு வந்து. ஐஏஎஸ் தேர்வில் வெற்றி பெற பலரிடம் வழிகாட்டுதல்களைப் பெற்றேன்.
எல்லோருக்கும் திறமை இருக்கிறது. அர்ப்பணிப்புடன் உழைத்தால் வெற்றி சாத்தியம். திறமை உள்ளவர்களுக்கு சரியான வழிகாட்டுதல்களும் மிக அவசியமானது. சரியான வழிகாட்டுதலைப் பெற்றால் எளிதில் வெற்றி அடையலாம். நமது இலக்கை தெளிவாக நினைத்துக் கொண்டு அதற்காக அர்ப்பணிப்புடன் உழைக்க வேண்டும்" என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், "என்னுடைய தங்கை ஆறு மாதங்களில் நீட் தேர்வுக்காக படித்து வெற்றி பெற்று, தமிழ்நாட்டில் தலைசிறந்த மருத்துவக் கல்லூரி ஒன்றில் பயின்று வருகிறார். அவர் அர்ப்பணிப்புடன் நீட் தேர்வுக்காகத் தயாரானது எனக்கும் மனோதிடத்துடன் படிக்க வேண்டும் என்ற எண்ணத்தை தூண்டியது. அப்படி படித்து தான், தற்போது நான் ஐஏஎஸ் தேர்வில் வெற்றி பெற்றுள்ளேன்" எனக் கூறினார்.
இதையும் படிங்க:முதல் முயற்சியிலேயே யுபிஎஸ்சி தேர்ச்சி பெற்ற தமிழகத்தைச் சார்ந்த மருத்துவர் பிரசாந்த்!