சென்னை: தாய்லாந்து நாட்டின் தலைநகரான பாங்காக்கில் இருந்து தாய் ஏர்வேஸ் பயணிகள் விமானம், நேற்று (பிப்.22) அதிகாலை சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தது. இதற்கிடையே, இந்த விமானத்தில் வரும் பயணி ஒருவரின் சூட்கேஸில் போதைப்பொருள் இருப்பதாக தாய்லாந்து நாட்டு சுங்கத்துறை அதிகாரிகள், இந்திய நாட்டு சுங்கத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்துள்ளனர்.
இதனை அடுத்து, டெல்லியில் உள்ள சுங்கத்துறை தலைமை அலுவலகத்தில் இருந்து சென்னை விமான நிலைய சுங்க அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கொடுக்கப்பட்டுள்ளது. அதன் பேரில், சென்னை விமான நிலைய சுங்க அதிகாரிகள், நேற்று (பிப்.22) அதிகாலை சென்னை சர்வதேச விமான நிலையம் வருகைப் பகுதியில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
இதுமட்டுமல்லாது, குறிப்பிட்ட அந்த தாய் ஏர்வேஸ் விமான பயணிகளின் லக்கேஜ்கள் வரும் கன்வேயர் பெல்ட்டை தீவிரமாக கண்காணித்த நிலையில், தாய்லாந்து சுங்கத்துறை அதிகாரிகள் குறிப்பிட்ட அந்த சூட்கேஸை பயணிகள் யாருமே எடுக்கவில்லை என்பதால், சென்னை விமான நிலைய சுங்க அதிகாரிகள் அந்த சூட்கேஸை எடுத்து திறந்து பார்த்துள்ளனர்.
அந்த சூட்கேசில், ஹைட்ரோ போனிக் கஞ்சா என்று அழைக்கப்படும் பதப்படுத்தப்பட்ட உயர் ரக கஞ்சா 14 கிலோ இருந்துள்ளது. அதன் சர்வதேச மதிப்பு சுமார் 7 கோடி ரூபாய் என்று கூறப்படுகிறது. இதை அடுத்து, சென்னை விமான நிலைய சுங்க அதிகாரிகள், அந்த உயர் ரக கஞ்சாவை பறிமுதல் செய்து, அந்த சூட்கேசில் இருந்த டேக் மூலம் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
இந்த விசாரணையில், அந்த சூட்கேஸ் புதுச்சேரி மாநிலத்தைச் சேர்ந்த பயணிக்குச் சொந்தமானது என்றும், சுங்கத் துறையினருக்குத் தகவல் கிடைத்து அவரை பிடிக்கத் தயார் நிலையில் இருக்கிறார்கள் என்பதை தெரிந்து கொண்டு, சூட்கேஸை எடுத்துச் செல்லாமல் விமான நிலையத்திலேயே விட்டுவிட்டு தப்பி ஓடி விட்டார் என்றும் தெரிய வந்துள்ளது.
இதை அடுத்து, சென்னை விமான நிலைய சுங்க அதிகாரிகள், இது சம்பந்தமாக வழக்குப் பதிவு செய்து, சென்னை விமான நிலையத்தில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர். அதோடு, சென்னை விமான நிலைய போலீசார் மத்திய தொழில் பாதுகாப்புப் படை ஆகியோருக்கும் தகவல் கொடுத்து, கஞ்சா கடத்தலில் ஈடுபட்டு தப்பி ஓடிய புதுச்சேரி மாநிலத்தைச் சேர்ந்த பயணியை தீவிரமாக தேடி வருகின்றனர்.
இதையும் படிங்க:கற்பு பூமி பட விவகாரம்.. சென்சார் போர்டுக்கு எச்சரிக்கை விடுத்த திருமாவளவன்!