சென்னை:தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் இருந்து ஆந்திர மாநிலம் திருப்பதிக்கு இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் நேற்று (நவ.17) காலை 11.30 மணி அளவில் புறப்பட்டது. அந்த விமானத்தில் 169 பயணிகள் 8 விமான ஊழியர்கள் உள்பட 177 பேர் இருந்தனர்.
இந்த பயணிகள் விமானம் திருப்பதி வான் வெளியில் நடுவானில் பறந்து கொண்டு இருந்தபோது விமானத்தில் திடீரென இயந்திர கோளாறு ஏற்பட்டுள்ளதை விமானி கண்டுபிடித்துள்ளார். இதையடுத்து விமானி அவசரமாக ஹைதராபாத் விமான நிலைய கட்டுப்பாட்டு அறையுடன் தொடர்பு கொண்டு நிலைமையை கூறியதை தொடர்ந்து விமானத்தை அவசரமாக தரை இறக்க வேண்டும் என கூறப்பட்டது.
இதையடுத்து கட்டுப்பாட்டு அறை அலுவலர்கள், விமானத்தை அவசரமாக திருப்பதி விமான நிலையத்தில் தரையிறக்குவது பாதுகாப்பாக இருக்காது; எனவே சென்னைக்கு சென்று, விமானத்தை அவசரமாக தரையிறக்கும் படி உத்தரவு பிறப்பித்தனர். இதைத் தொடர்ந்து சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கும் அவசர தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக சென்னை விமான நிலையத்தில் அந்த விமானம் அவசரமாக தரையிறங்குவதற்கான அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டன.
அதன் பின்பு அந்த பயணிகள் விமானம் நேற்று மதியம் சென்னை விமான நிலையத்தில் பத்திரமாக தரை இறங்கியது. இதையடுத்து பயணிகள் அனைவரும் விமானத்திலிருந்து கீழே இறக்கப்பட்டு சென்னை விமான நிலைய ஓய்வறைகளில் தங்க வைக்கப்பட்டனர்.