திருப்பூர்:பல்லடம் அருகே இரவில் உறங்க சென்ற கணவன், மனைவி காலையில் சடலமாக கிடந்த சம்பவம் குடும்பத்தாரை நடுநடுங்க வைத்துள்ளது. பெற்றோர் இருவரும் ஒரே நாளில் உயிரிழந்த நிலையில் பிள்ளைகள் இருவர் பரிதவித்துள்ளனர்.
திருப்பூர் மாவட்டம், பல்லடம் அருகே சின்னக்கரை லட்சுமி நகர் பகுதியில் கோழி இறைச்சி கடை நடத்தி வருபவர் சிலம்பரசன். இவருக்கு வயது 38. இவர் தனது மனைவி அகிலாண்டேஸ்வரி (28), மற்றும் ஒரு மகள், மகனுடன் வசித்து வந்தார்.
அலறிய மகள்
இந்த நிலையில், நேற்று வழக்கம்போல வேலைகளை முடித்துவிட்டு இரவு வீட்டில் சிலம்பரசன் மற்றும் குடும்பத்தினர் ஓய்வெடுத்து கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. மறுநாள் காலை சிலம்பரசனின் மகள் வீட்டில் இருந்து வெளியே வந்து பார்த்துள்ளார். அப்போது சிலம்பரசன் பிணமாக கிடந்துள்ளார். மேலும், அவரது மனைவி அகிலாண்டேஸ்வரி வெட்டு காயத்துடன் இறந்து கிடந்ததாகவும் கூறப்படுகிறது.
தொடர்ந்து அருகில் இருந்தவர்கள் சிறுமியின் அலறல் சத்தம் கேட்டு அங்கு சென்று பார்த்த போது, கணவன், மனைவி இருவரும் இறந்து கிடந்துள்ளனர். தொடர்ந்து அவர்கள் இது குறித்து பல்லடம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கவே, சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற துணைக் காவல் கண்காணிப்பாளர் சுரேஷ் தலைமையிலான போலீசார் உயிரிழந்த நிலையில் இருந்த இருவரையும் மீட்டு பல்லடம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
போலீசார் தீவிர விசாரணை
மேலும், சம்பவ இடத்திற்கு தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு விசாரணையானது மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குடும்ப பிரச்சினை காரணமாக கணவன் மனைவியை வெட்டிவிட்டு தற்கொலை செய்து கொண்டாரா அல்லது வேறு ஏதேனும் காரணமா என போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும், காவல்துறையினர் தரப்பில், மனைவியை வெட்டிவிட்டு கணவனும் தற்கொலை செய்து கொண்டதாக தற்போது தகவல் தெரிவிக்கின்றனர். மேலும், பெற்றோர் சடலமாக கிடந்ததை கண்டு பிள்ளைகள் இருவரும் கதறிய காட்சி காண்போரை கலங்கடிக்க செய்தது.
பதறிய பல்லடம்
கடந்த சில தினங்களுக்கு முன்பு பல்லடம் அடுத்த சேமலைகவுண்டம்பாளையம் பகுதியை சேர்ந்த தெய்வசிகாமணி (76), மனைவி அலமேலுவுடன் (65), மகன் செந்தில்குமார் (45) ஆகிய மூன்று பேரை மர்ம நபர்கள் கொடூரமாக வெட்டி கொலை செய்துவிட்டு தப்பிய சம்பவம் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. கொலையாளிகளை 10 தனிப்படை அமைத்து காவல்துறை தேடி வருகிறது. தமிழகத்தை உலுக்கிய இக்கொலை சம்பவம் இன்னும் அதிர்வலைகளை ஏற்படுத்திக்கொண்டு இருக்கும் சூழலில் பல்லடத்தில் கணவனே மனைவியை கொன்று தானும் தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படும் சம்பவம் பல்லடத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
தற்கொலை எதற்கும் தீர்வல்ல:சொந்தக் காரணங்களாலோ அல்லது மன அழுத்தத்தின் காரணமாகவோ தற்கொலை எண்ணம் தோன்றினால் 104 அல்லது சிநேகா உதவி எண்களை அழையுங்கள். சிநேகா தற்கொலைத் தடுப்பு உதவி எண் - 044-24640050, மாநிலத் தற்கொலைத் தடுப்பு உதவி எண் - 104, இணைய வழித் தொடர்புக்கு - 022-25521111, மின்னஞ்சல் help@snehaindia.org அல்லது நேரில் தொடர்புகொள்ள, சிநேகா பவுண்டேஷன் ட்ரஸ்ட், 11, பூங்கா சாலை (பார்க் வியூ ரோடு), ஆர்.ஏ.புரம், சென்னை - 600028.