திண்டுக்கல்:திண்டுக்கல் மாவட்டம் பழனியில் நடைபெற்று வரும் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாட்டில் லட்சக்கணக்கான மக்கள் பங்கேற்றுள்ளனர் என்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார். இது குறித்து செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியில், “முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சிக்கு வந்து 39 மாதங்களில் இந்து சமய அறநிலையத்துறை வரலாற்றில் இல்லாத வரை கோயில்கள் புனரமைக்கவும், ஆன்மீக அன்பர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுக்கவும், அவரது தலைமையில் ஆலோசனைக் குழு கூட்டத்தைக் கூட்டி அதில் பல்வேறு திட்டங்களை தீட்டி செயல்படுத்தி வருகிறார்.
அந்தக் குழுவின் முடிவின்படி, 24, 25ஆம் தேதிகளில் பழனியில் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு முடிவு செய்யப்பட்டது. அந்த வகையில், நேற்று பழனியில் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு துவங்கியது. இதற்காக 11 குழுக்கள் அமைக்கப்பட்டு சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. நேற்று துவங்கிய மாநாடு மாபெரும் வெற்றி பெற்றுள்ளது. நேற்று நடைபெற்ற கலை நிகழ்ச்சிகளில் மட்டும் 600க்கும் மேற்பட்ட கலைஞர்கள் கலந்து கொண்டுள்ளனர்.
இந்நிகழ்ச்சியில் 4 நீதியரசர்கள் உள்பட அனைத்து ஆதீனங்களும் கலந்து கொண்டனர். முன்னணியில் இருக்கின்ற ஆன்றோர்கள், சான்றோர்கள், தமிழ் பெருமக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள். ஜப்பான், ஜெர்மனி, ஆஸ்திரேலியா, மலேசியா, சிங்கப்பூர், சுவிட்சர்லாந்து உட்பட 300க்கும் மேற்பட்ட வெளிநாட்டவர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர். பழனியைச் சுற்றிலும் அரோகரா கோஷம் கேட்டுக் கொண்டிருக்கிறது.
காணொலிக் காட்சி மூலமாக தமிழக முதலமைச்சர் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார். நாங்கள் திட்டமிட்டது 25 ஆயிரம் பேர் மட்டும் தான். ஆனால், நேற்றைய மாநாட்டில் லட்சக்கணக்கானோர் கலந்து கொண்டனர். தமிழக அரசு, தமிழக முதலமைச்சர் முருகனுக்கு எடுக்கின்ற இந்த மாநாட்டை அனைத்து தரப்பு மக்களும் ஏற்றுக் கொண்டனர். 160 முருகன் தொடர்பான புகைப்படக் கண்காட்சி, 3D திரையரங்கம், VR கலையரங்கம், புத்தக கண்காட்சி ஆகியவற்றை லட்சக்கணக்கான மக்கள் பார்வையிட்டனர்.